காவிரி குடிநீர் வழங்கக் கோரி அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் போராட்டம்
மணப்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் தர்ணா
காவிரி குடிநீர் வழங்கக்கோரி போராட்டம்
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மணப்பாறை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. நகராட்சி பகுதிக்கு குளித்தலை அருகே உள்ள மணத்தட்டையில் இருந்து காவிரி ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு மணப்பாறை நகராட்சி பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக காவிரி குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படுதில்லை என கூறப்படுகிறது. மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டி அதிமுக கவுன்சிலர்கள் ராமன், எத்திராஜ், கௌசிக், தீபாராஜா, அழகுசித்ரா, சுதாபாஸ்கர், அபிலாஷ், சர்மிளாசுரேஷ், சவரிமுத்து, செல்லம்மாள் ஆகிய 10 பேரும் நகராட்சி வாயில் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நகராட்சி பகுதிக்கு காவிரி குடிநீர் வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் நகராட்சி ஆணையர் சியாமளா பேச்சு வார்த்தை நடத்தி காவிரி குடிநீர் சீராக வழங்குவதில் உள்ள பிரச்சினைகளை போக்க நகராட்சி அதிகாரிகள், குடிநீர் வாரிய அதிகாரிகள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கொண்ட ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு தடையின்றி குடிநீர் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. அதிமுக கவுன்சிலர்களின் திடீர் போராட்டத்தால் நகராட்சியில் பரபரப்பு ஏற்பட்டது.