திருச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் – உதவியாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி, செப்.25 திருச்சி ஆட்சியரகம் முன்பாக அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!
தமிழகம் தழுவிய போராட்டத்தின் ஒருபகுதியாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் (CITU) சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், ஊழியர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
தேர்தல் வாக்குறுதியான அடிப்படை ஊதியம் ₹18,000 என்பதை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஏழைப் பிள்ளைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அங்கன்வாடி மையங்களில் நீண்ட நாட்களாக உள்ள காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். மேலும், ஓய்வுபெறும் ஊழியர்களுக்குப் பணிக்கொடையாக ₹10 லட்சம் வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மையங்களுக்கு வரும் குழந்தைகளின் உணவுச் செலவினத் தொகையை முன்பணமாகவோ அல்லது மாதந்தோறும் நிலுவையின்றியோ வழங்க வேண்டும்.
போஷன் டிராக்கர் (Poshan Tracker) செயலி பணிக்கான அனைத்து செலவினத் தொகைகளையும் உடனடியாக வழங்க வேண்டும்.
10 ஆண்டுகள் பணி முடித்த ஊழியர்களுக்கும், தகுதியுள்ள குறுமைய ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கும் எவ்வித தாமதமும் இன்றி பதவி உயர்வு வழங்க வேண்டும். உள்ளூர் மற்றும் வெளியூர் பணிமாறுதல்களை உடனே வழங்கிட வேண்டும்.
ஆண் வாரிசுகளுக்கும் வாரிசு வேலை முன்னுரிமை வழங்க வேண்டும். மேற்பார்வையாளர்கள் நிலை 2-க்கான ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில், சனிக்கிழமைகளில் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும். என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பினர்.
இக்கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றாவிட்டால், அடுத்தகட்டமாகப் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என எச்சரித்தனர்.