மணப்பாறையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி
திருச்சி, ஏப். 3 திருச்சி மாவட்டம், மணப்பாறையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி மக்களுக்கு விழிப்பணர்வு ஏற்படுத்திடும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மணப்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியில் இருந்து தொடங்கிய பேரணியை ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி தொடங்கி வைத்தார். தாரை தப்பட்டடை முழங்க சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கல்லூரி மாணவ – மாணவிகள் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டு வாக்களிப்பதில் உறுதிகொள்ளுங்கள், வாக்களித்து உறுதி படுத்துங்கள், உங்கள் வாக்கு உங்கள் குரல், எனது ஓட்டு எனது பெருமை என பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி கோசங்கள் எழுப்பிச் சென்றனர். கல்லூரியில் தொடங்கிய பேரணி பேருந்து நிலையம் வரை சென்று மீண்டும் கல்லூரியிலேயே நிறைவு பெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர். க.மலர்மதி முன்னிலையில் நடைபெற்ற பேரணியில் மணப்பாறை வட்டாட்சியர் தனலெட்சுமி, தேர்தல் அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள், நாட்டு நலப்பணி திட்டம் மாணவ மாணவிகள், இத்துடன் வேதா சமுதாய கல்லூரி மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.