வாய்க்கால்களில் தண்ணீர் திறக்காவிட்டால் மறியல் போராட்டம்: தமிழக அரசுக்கு அய்யாக்கண்ணு எச்சரிக்கை

0 19
Stalin trichy visit

திருச்சி, செப். 3 திருச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

காவிரி கரையோரம் உள்ள வாழை தென்னை மரங்களை பாதுகாக்க வாய்க்கால்களில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும். இல்லாவிட்டால் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று
தேசிய தென்னிந்திய இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு எச்சரிக்கை விடுத்தார்.

விவசாயிகளின் வாழ்வாதார உரிமைகளுக்காகப் போராடிய விவசாய சங்கத் தலைவர்கள் மீது, திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலங்களில் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளைத் திரும்பப் பெறப்போவதாகத் தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

முன்னதாக, அதிமுக ஆட்சிக் காலத்தில் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக திமுக ஆட்சிக் காலத்தில் அன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால், அவர் அதனை நடைமுறைப்படுத்தவில்லை.

எனவே, தற்போதைய முதல்வர் விஜய் தன் அறிவிப்பை உண்மையாகவே நடைமுறைப்படுத்தப் போகிறாரா? இல்லையா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். வழக்குகளை திரும்ப பெற்றால் அது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளிப்பதாக அமையும்.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடைப் பகுதிக்குச் சென்று சேர வாய்ப்பில்லை. இந்நிலையில், திருச்சியில் காவிரி கரையோரம் உள்ள வாழை, தென்னை, பனை உள்ளிட்ட மரங்கள் நீரின்றி காய்ந்து வருகின்றன. எனவே, உடனடியாக திருச்சியில் உள்ள வாய்க்கால்கள் அனைத்திலும் தண்ணீரைத் திறந்துவிட வேண்டும்.தவறினால், அடுத்தகட்டமாகப் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

தவெக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, விவசாயக் கடன்கள் அனைத்தையும் உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

பாஜக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி விவசாய விளைபொருட்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும் வகையில் விலையை இரட்டிப்பாக்கி நிர்ணயம் செய்ய வேண்டும்.

விவசாயிகளின் வாழ்வாதார உரிமைகளுக்காக நடத்தப்படும் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்குத் தடை விதிக்கக் கூடாது.

விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளைத் மத்திய அரசும், தமிழக அரசும் உடனடியாக நிறைவேற்றவேண்டும் என அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.