அய்யம்பாளையம் தண்டாயுதபாணி கோயில் பங்குனி உத்திரத் திருவிழா

0 113
Stalin trichy visit

திருச்சி, ஏப்.1  அய்யம்பாளையம் தண்டாயுதபாணி கோயில் பங்குனி உத்திரத் திருவிழா –
பக்தி கோஷத்துடன் தேரோட்டம்.

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள பழமைவாய்ந்த அய்யம்பாளையம் அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலில், பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு இன்று மிகச்சிறப்பாக தேரோட்டம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டின் விழாவை முன்னிட்டு, இன்று அதிகாலை முதலே மூலவர் தண்டாயுதபாணி சுவாமிக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனைகளும் நடைபெற்றன. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் காலை தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட
40 அடி உயர திருத்தேரில் தண்டாயுதபாணி சுவாமி எழுந்தருளினார். தேரின் முன்பாக சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் காட்டப்பட்ட பின்னர் கூடியிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா… முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷம் விண்ணதிர,
தேரின் வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேர் கோயிலின் வெளிப்பிரகாரத்தை சுற்றி வலம் வந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. தேர் நிலைபெயர்ந்து மீண்டும் நிலைக்கு வந்தடைந்ததும், சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் உற்சவர் மண்டபத்தில் எழுந்தருளினார்.

விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. அய்யம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.