மணப்பாறை அருகே பாரதியார் செல்லம்மாள் ரதத்திற்கு வரவேற்பு அளித்த தனியார் கல்லூரி மாணவர்கள்
மகாகவி பாரதியார் வாழ்வில் முக்கிய இடம் பெற்ற அவரது மனைவி செல்லம்மாளுக்கு நினைவிடம் அமைக்க சென்னையைச் சேர்ந்த திருநின்றவூர் சேவாலயா அமைப்பு முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த அமைப்பு செல்லம்மாளின் பிறந்த ஊரான தென்காசி மாவட்டம், கடையம் கிராமத்தில் ரூ 3 கோடி மதிப்பில் கற்றல் மையம், நூலகம், அருங்காட்சியகம், ஆய்வகம், கருத்தரங்கு, கவியரங்கு மற்றும் கலைநிகழ்சிகள் என முழுநேர செயல்பாட்டில் இருக்கும் வகையில் நினைவிடம் அமைய உள்ளது. அங்கு செல்லம்மாள் பாரதியாருடன் இருக்கக்கூடிய முழு உருவச்சிலையை நிறுவ திட்டமிடப்பட்டு அச்சிலைகள் வைக்கப்பட்ட ரதம் சென்னையில் இருந்து ஏப்ரல் 17ம் தேதி புறப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளின் வழியாகச் சென்று இம்மாதம் 31ம் தேதி கடையத்தை சென்றடைகிறது. இந்த ரதத்திற்கு பல்வேறு பகுதிகளிலும் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வளநாடுகைகாட்டி பகுதிக்கு வந்த ரதத்திற்கு மீனாட்சி விடியல் கலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பாரதியார் – செல்லம்மாள் வேடமணிந்த குழந்தைகள் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதேபோல் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர், மாணவ, மாணவிகள் என அனைவரும் சிலைகளுக்கு மாலை அணிவித்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினர். மாணவர்கள் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் சுற்றி அசத்தினர். இதனைத் தொடர்ந்து பாரதியார் கவிதைகள், நாடகம், பரதம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.