பா.ஜ.க. சார்பில் விபிஜி ராம்ஜி 125 நாட்கள் வேலை வாய்ப்பு உறுதி திட்டம் குறித்து பயிலரங்கம்
திருச்சி, பிப்.2 பாரத பிரதமரின் விபி ஜி ராம் ஜி என்ற கிராம வாழ்வாதார மேம்பாட்டுக்கு 125 நாட்களுக்கான வேலைவாய்ப்பு உறுதி திட்டம் குறித்த மாநில அளவிலான பயிலரங்க கூட்டம், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில், பாஜக திருச்சி மாவட்ட தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், பாஜக தேசிய விவசாய அணி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜ்குமார் சாகர், மாநில தேர்தல் பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில விவசாய அணி துணைத் தலைவர் ராமலிங்கம் மற்றும் தமிழகத்தில் உள்ள மாவட்ட, மாநில நிர்வாகிகள் 150 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், பாஜக விவசாய அணியின் தேசிய தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜ்குமார் சாகர் மற்றும் சுதாகர் ரெட்டி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள்.
இதில் சுதாகர் ரெட்டி பேசுகையில் …
125 நாள் வேலை வாய்ப்பு உறுதி திட்டம் என்பது ஊரக பகுதிகளை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு பாரத பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இத்திட்டத்துக்கு எதிராக தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியினரும், திமுகவினரும், பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.
திமுக ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்று வருகிறது. ஆகையால் வருகின்ற தேர்தலில் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கக்கூடாது.
நாட்டின் வளர்ச்சிக்காக பாரத பிரதமர் மோடி அவர்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியினர், மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். நரேந்திர மோடி அவர்கள் ஆட்சியில் ஒரு துளி அளவு கூட ஊழல் நடைபெறவில்லை.
ஆனால் திமுக ஆட்சியில் தொடர்ந்து ஊழல் நடைபெற்று வருகிறது. இதில் பலர் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிக்கொண்டு, சிறையிலும், பிணையிலும் உள்ளனர். திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு துறைகளில் தொடர்ந்து ஊழல், மணல் கொள்ளை, கனிம வள கொள்ளை, டாஸ்மாக்கில் ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் பலர் சிக்கியுள்ளனர்.
இன்றைய தமிழக ஆட்சியாளர்களுக்கு எதிராக வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழ்நாட்டு மக்கள் நிச்சயமாக வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வி அடையும். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மக்களுடைய ஆதரவு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெறும் அளவில் உள்ளது.