முசிறியில் தைப்பூசத் திருவிழா : காவிரி ஆற்றில் தீர்த்தவாரிக்கு சுவாமிகள் புறப்பாடு

0 105
Stalin trichy visit

திருச்சி, பிப்.2  திருச்சி மாவட்டம் முசிறி மற்றும் வெள்ளூர் பகுதிகளில் இருந்து சுவாமிகள் காவிரி ஆற்றில் தீர்த்தவாரி காண்பதற்காகப் புறப்பட்டனர். மேளதாளங்கள் முழங்க, ஆடல் குதிரைகள் சூழ நடைபெற்ற இந்தப் புறப்பாட்டைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

திருச்சி மாவட்டம் முசிறியில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. வெள்ளூர் ஸ்ரீ சிவகாமசுந்தரி உடனுறை திருக்காமேஸ்வரர் கோவிலில் இருந்து சுவாமி புறப்பட்டு முசிறிக்கு வருகை தந்தார். வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள், தேங்காய் பழம் உடைத்து சுவாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து முசிறி கடைவீதியில் உள்ள பண்ணை சார்பில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, முசிறி சிவன் கோவிலில் ஸ்ரீ கற்பூரவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர், வெள்ளூர் திருக்காமேஸ்வரரை எதிர்கொண்டு அழைத்து வரவேற்றார்.
வெள்ளூர் கோவிலின் புகழ்பெற்ற குதிரை வாகனம் முன்னே செல்ல, அதனைத் தொடர்ந்து முசிறி சிவன் கோவிலின் புகழ்பெற்ற சுழலும் குதிரை வாகனம் அணிவகுத்தது.
அலங்கரிக்கப்பட்ட சூலம், ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் மற்றும் அம்மன் திருவீதி உலா வந்த காட்சி பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலன்ஸ் வாகனமும் ஊர்வலத்தின் பின்னே சென்றது.

ஒவ்வொரு சுவாமி சிலைக்கு முன்பாகவும் நாதஸ்வரம், மேளம் மற்றும் சிவ வாத்தியங்கள் முழங்கின. குறிப்பாக முசிறி சுவாமிக்கு முன்பாக நடைபெற்ற பேண்ட் வாத்திய இசை மற்றும் குதிரை நடனம் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தது. முசிறி சிவன் கோவிலின் சுழலும் குதிரை வாகனத்தின் அசைவுகளைக் கண்டு பக்தர்கள் வியந்தனர்.
இந்த பிரம்மாண்ட ஊர்வலமானது குளித்தலை கடம்பனேஸ்வரர் ஆலயத் தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காகக் காவிரி ஆற்றை நோக்கிச் சென்றது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.