ஜவுளி கடையின் பூட்டை உடைத்து பணம் – துணிகள் திருட்டு
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மேலவாளாடி தெற்கு சத்திரம் பகுதியில் ஜவுளி கடையின் பூட்டை உடைத்து பணம், துணிகள் லேப்டாப் பை திருடி சென்ற மர்ம நபர்கள்.
லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள கீரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம். இவருடைய மகன் 45 வயதான ஆனந்தகுமார். இவர் மேளவாளாடி தெற்கு சத்திரத்தில் உள்ள திருச்சியில் லால்குடி சாலையில் சொந்தமாக ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 25 ம் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று உள்ளார். நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது கடையின் கல்லாவில் இருந்த ரூ. 15 ஆயிரம் பணம்,20000 மதிப்புள்ள துணிகள், ஒரு லேப்டாப் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இது குறித்து ஆனந்தகுமார் சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பணம்,துணிகள்,லேப்டாப்பை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.