துவரங்குறிச்சியை அடுத்த கொண்டையம்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி(55). இவர் வீட்டை பூட்டிவிட்டு, தனது மனைவியுடன் சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் நேற்று அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறக்கப்பட்டிருந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்து, அழகர்சாமிக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர் கூறியதன்பேரில் உறவினர்கள் அவரது வீட்டிற்கு வந்து பார்த்தனர். அப்போது வீட்டில் இரும்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 29 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி குத்து விளக்குகள், வெள்ளி செம்பு, டம்ளர் உள்ளிட்ட சுமார் ஒரு கிலோ வெள்ளிப்பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். வீட்டை இரவில் பூட்டுவிட்டு சென்ற நிலையில், அதை மர்மநபர்கள் நோட்டமிட்டே இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.