மளிகைக் கடை பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரம் கொள்ளை
திருச்சி, ஜன.31 புதுக்கோட்டை மாவட்டம் ராஜாளிபட்டி அருகே முத்த கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் ரத்தினகுமார் (38) இவர் மணப்பாறையில் விராலிமலை ரோட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்ற நிலையில் நேற்று காலையில் கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு எதிரே உள்ள ரோட்டின் அருகே வீசப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனை அடுத்து அவர் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் குணசேகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார். இதில் கடையில் உள்ள கல்லாவில் இருந்த 50 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துசென்றுள்ளனர்.
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மணப்பாறை பகுதியில் தொடர்ந்து வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளை குறிவைத்து கொள்ளையர்கள் பூட்டு உடைத்து திருடி செல்வது குறித்து வியாபாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.