மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியின் முதல் வெற்றி : காதர் மொய்தீன் பேட்டி

0 15
Stalin trichy visit

திருச்சி, அக்.10 திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார் அப்போது:

இன்று மறக்க முடியாத திருநாள். காரணம், தமிழகத்தில் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி என்ற புதிய கூட்டணி முதல்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை இப்படி ஒரு கூட்டணி உருவானதில்லை.

இந்த கூட்டணிக்கு தமிழக மாண்புமிகு முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமை தாங்குகிறார். இதில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு நடந்த முதல் தேர்தலான மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் நாங்கள் பங்கேற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளோம். வெற்றியை வழங்கிய தொகுதி மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தவெக ஆட்சி ‘தமிழகத்தில் லஞ்ச லாவண்யம் இல்லாத ஆட்சியை தருவோம்’ என்று சொல்லி ஆட்சி நடத்துகிறது.

எத்தனையோ தலைவர்களை பார்த்திருக்கிறோம். ஊழலற்ற ஆட்சியை தருவோம் என்று சொன்னதோடு நில்லாமல், அதற்கான முயற்சிகளை செய்யும் முதல் அமைச்சராக ஜோசப் விஜய் இருக்கிறார். அதன் விளைவுதான் இந்த வெற்றி.

எம்.ஜி.ஆர் ஆட்சி அமைத்த பிறகு முதல் தேர்தலாக திண்டுக்கல்லில் மாயத்தேவர் வெற்றி பெற்றது போல, இந்த வெற்றியும் மிகச்சிறந்த வெற்றி.

மதுராந்தகத்தில் மரகதம் குமாரவேல் அவர்களும், தாராபுரத்தில் சத்தியபாமா அவர்களும் தவெக வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த வெற்றிக்கு முதல்வரின் 6 மாத நல்லாட்சி ஒரு காரணம். தேர்தல் விதிகள் காரணமாக தாய்மாமன் தங்க மோதிர திட்டம் மற்றும் மகளிர் இலவச பேருந்து பயணம் ஆகிய இரண்டு முக்கிய திட்டங்களை இந்த இரண்டு தொகுதிகளில் அமல்படுத்த முடியவில்லை. அவை மட்டும் அமல்படுத்தப்பட்டிருந்தால் வாக்கு வித்தியாசம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.

வரலாற்றில் முதல்முறையாக ஒரு மாநில முதல்வர் இடைத்தேர்தலுக்காக மதுராந்தகத்தில் 35-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும், தாராபுரத்தில் 42-க்கும் மேற்பட்ட இடங்களுக்கும் நேரடியாக சென்று தெருத்தெருவாக வாக்கு சேகரித்துள்ளார். அதற்கு மக்கள் அபரிமிதமாக வாக்களித்துள்ளனர்.

இதில் போட்டியிட்ட அதிமுக, திமுக வேட்பாளர்கள் தவெக வேட்பாளர்கள் முன் நிற்க முடியவில்லை.

தமிழகத்தில் இதுவரை கூட்டணி அமைச்சரவை என்பது உருவானதே கிடையாது. முதல்முறையாக கூட்டணி அமைச்சரவை உருவாக்கப்பட்டு, அதன் வேட்பாளர்களாக இவர்கள் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றுள்ளனர். இந்த வெற்றிக் கூட்டணியின் வரலாறு இன்று தொடங்குகிறது. இது வெற்றி மேல் வெற்றி பெறும் கூட்டணியாக இருக்கும்.

இந்த வெற்றிக்காக பாடுபட்ட அமைச்சர் ஷாஜகான், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, மாநில பொதுச்செயலாளர் அபூபக்கர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.”

துரோகத்துக்கு கிடைத்த இடைக்கால வெற்றி, பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது என ஸ்டாலின் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு

எதிர்க்கட்சித் தலைவர் அப்படித்தான் சொல்வார். துரோகம் என்பதற்கு அடிப்படையே கிடையாது. விராலிமலை தொகுதியில் விஜயபாஸ்கர் தனது MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் சேர்ந்தார். அவர் தொகுதி மக்கள் – ஆண்கள், பெண்கள், பெரியவர்கள் அனைவரையும் அழைத்து 3 நாள் கூட்டம் நடத்தி ஆலோசனை கேட்ட பிறகுதான் ராஜினாமா செய்தார். அது பத்திரிகைகளில் வந்த செய்திதான்.

அதேபோல, நாங்கள் திமுகவோடு நீண்ட நாள் பயணித்தவர்கள். கலைஞர், அண்ணா, ஸ்டாலின் ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர்கள். ஆனால் மே 10-ஆம் தேதிக்குள் ஆட்சி அமைக்காவிட்டால் ஜனாதிபதி ஆட்சி வந்துவிடும் என்ற சூழல் வந்தது. ஜனாதிபதி ஆட்சி என்றால் பாஜக ஆட்சிதான் வரும். பாஜக ஆட்சி வர நாம் காரணமாக இருக்கக்கூடாது என எங்கள் சமுதாயத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என பலரும் 3 நாள் தொடர்ந்து போன் செய்து வலியுறுத்தினார்கள். இதுவரை முஸ்லிம் லீக்குக்கு இப்படி யாரும் போன் செய்ததில்லை.

அதனால் நாங்கள் கீழிருந்து மேல்வரை கலந்து ஆலோசித்தோம். அகில இந்திய தலைமையையும் கேட்டோம். ஸ்டாலின் அவர்களை இரண்டு முறை சந்தித்தோம். ஒருமுறை ‘அதிமுக – திமுக கூட்டணி ஆட்சி’ பற்றியும், மறுமுறை ‘திருமாவளவனை முதல்வராக்கலாம்’ என்றும் கூறினார்கள். அது சாத்தியமில்லை என தோன்றியதால், கேரள தலைமையின் அறிவுரைப்படி நிபந்தனையற்ற ஆதரவை கொடுத்தோம். அதற்கு பணம் வாங்கிய வரலாறும் கிடையாது, துரோகம் செய்த வரலாறும் கிடையாது.

கூட்டணி இல்லாமல் தனித்து நின்றிருந்தால் வெற்றி சாத்தியமா? என்ற கேள்விக்கு

தமிழக வரலாறு கூட்டணியை வைத்துத்தான் இருக்கிறது. 1967-ல் இருந்து இன்றுவரை எந்த கட்சியும் தனித்து நின்று வென்றதில்லை. வெற்றி என்பது கூட்டணியின் வெற்றி. ஒரு ஓட்டு விழுந்தாலும் அது கூட்டணி ஓட்டுதான். மதுராந்தகத்திலும், தாராபுரத்திலும் எங்கள் சமுதாயத்தின் 30,000, 22,000 வாக்குகள் உள்ளன. அவர்களிடம் நாங்கள் பிரச்சாரம் செய்தோம். இது மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியின் வெற்றி. இந்த வரலாறு இனி தொடரும்.

Leave A Reply

Your email address will not be published.