மரங்களுக்கு கேக் வெட்டி 4ம் ஆண்டு பிறந்தநாள் விழா

0 147
Stalin trichy visit

மணப்பாறை அருகே மரங்களுக்கு கேக் வெட்டி 4ம் ஆண்டு பிறந்தநாள் விழா.
இயற்கையை நேசித்து நெகிழ வைத்த மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கிராம மக்கள்.

பசுமை இந்தியாவை உருவாக்கிட வேண்டும், மரம் அதிக அளவில் நட வேண்டும் என்பதை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. இதுமட்டுமின்றி இப்போது மரம் நடுவதன் அவசியம் குறித்து பலரும் அறிந்து அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் மரம் நட்டு வைப்பது மட்டுமல்ல நமது நோக்கம். அவற்றை குழந்தையை போல் பராமரித்து வளர்த்து பயன்தரும் மரங்களாக மாற்றிடுவதும் நம் கடமை என்பதை உணர்த்திடும் வகையில் ஒரு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றனர் ஒரு ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொய்கைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட புதுப்பட்டியில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கிராம மக்களின் உதவியோடு கடந்த 4 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் புதுப்பட்டி, கீழபொய்கைப்பட்டி, நாயன்மார்கோவில், ரெங்ககவுண்டம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் நடப்பட்டது. அதன்பின்னர் அது தொடர்ந்து பராமரிக்கப்படும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் மரக்கன்று நட்ட தேதியில் அதற்கு பிறந்த நாள் விழா நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி 4ம் ஆண்டான இந்த ஆண்டும் இன்று மரங்களுக்கான பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மக்கள் பிரதிநிதிகள், வேளாண் மற்றும் வனத்துறை அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள், இயற்கை பற்றாளர்கள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். மருத்துவர் கலையரசன், ஊராட்சி மன்ற தலைவர் ரோஸ்லின்சகாயமேரி ஆகியோர் 4 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மரங்களுக்கு மாலை அணிவித்தனர். இதைத் தொடர்ந்து உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களும் மரங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவினர். பின்னர் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றது. பின்னர் புதிதாக மரக்கன்றுகள் நடப்பட்டதுடன் பொதுமக்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இதுமட்டுமின்றி கடந்த ஆண்டுகளில் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்ட மரக்கன்றுகளை நட்டு சிறந்த முறையில் பராமரித்து வளர்த்து வரும் 200 பேருக்கு பரிசுகளை வழங்கி ஊராட்சிமன்ற தலைவர் ரோஸ்லின்சகாயமேரி அசத்தினார்.
இந்த நிகழ்வில் முக்கியமாக மரக்கன்றுகள் வளர்ந்துள்ள பகுதிலேயே எந்தவித பந்தலும் அமைக்காமல் அந்த மரங்களில் நிழலிலேயே அமர்ந்து நிகழ்ச்சி நடத்தி அசத்தியது அனைவரையும் நெகிழ வைத்தனர். அனைவரும் மரங்கள் நட்டு வைத்து பசுமை நிறைந்த மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும் என்பதுடன் மீண்டும் மாதம் மும்மாறி மழை பெய்திட மரங்களை வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். மக்கள் பிரதிநிதிகள் தொடங்கி பல்வேறு அமைப்புகள், துறை அதிகாரிகள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்த மரக்கன்றுகளுக்கு பிறந்த நாள் கொண்டாடிய நிகழ்வு காண்போரை நெகிழ வைத்திருக்கின்றது. நம் சுவாசத்திற்கு முதன்மையாக விளங்கி ஆக்சிஜன் தரும் மரங்களை பாதுகாத்து பராமரிப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமை என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இருக்கப்போவது இல்லை.

Leave A Reply

Your email address will not be published.