மரத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய கார் : 4 இளைஞர்கள் உயிர் தப்பினர்
திருச்சி மாவட்டம், முசிறி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து அந்தரத்தில் தொங்கிய விபத்தில், 4 இளைஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
முசிறி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த தினேஷ் (25), சங்கர் (22), தமிழ்ச்செல்வன் (29) மற்றும் ஹரிஷ் (19) ஆகிய 4 இளைஞர்கள் காரில் அதிகாலை சமயபுரம் சென்று விட்டு மீண்டும் திரும்பி உள்ளனர் திருச்சி – நாமக்கல் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். கார் சந்தப்பாளையம் பகுதி அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
வேகமாகச் சென்ற கார், சாலையோரம் இருந்த ஒரு பெரிய மரத்தில் பலமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் அப்படியே தலைகுப்புற கவிழ்ந்து, மரத்திற்கும் தரைக்கும் இடையே அந்தரத்தில் தொங்கியது. காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.
இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த தினேஷிற்கு கால் முறிவு ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தார். மற்ற மூவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவர்களை மீட்டு முசிறியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
நால்வரும் பெரும் உயிர்ச்சேதமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.