கார்மல்ஸ் குழுமப் பள்ளிகளில் கர்ம வீரர் காமராசரின் 120வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
கார்மல்ஸ் குழுமப் பள்ளிகளில் கர்ம வீரர் காமராசரின் 120வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கார் மல்ஸ் கல்விக் குழுமத்தின் தாளாளர் பாக்கியஜோதி தேவதாஸ், முதல்வர் மனோவா பிரேம் குமார் மற்றும் கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜோஸ்ஃபின் பெர்ஸி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திருக்குறள் முருகானந்தம் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் மாணவரிடையே பேச்சுப் போட்டி, இசைப் போட்டி மற்றும் கவிதைப் போட்டி நிகழத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினரான திருக்குறள் முருகானந்தம் காமராசரின் பெருமையை எடுத்துரைக்கும் விதமாக, அவர் வாழ்வில் நிகழ்ந்த பல சுவாரசியமான நிகழ்வுகளை மாணவர்களிடையே பகிர்ந்து கொண்டார். காமராசரின் கல்விப்பணியானது அளவிட முடியாதது என்றும், அவர் ஆட்சி செய்த ஒன்பது வருடங்கள் தமிழக அரசியல் வரலாற்றின் பொற்காலம் என்றும் புகழ்ந்து கூறினார்.
அவர் தன் உரையில் ஒருமுறை பத்தாம் வகுப்பு மாணவன் மேடையில் அருமையாக பேசும் பொழுது காமராசர் அம்மாணவனிடம், மேடைப் பேச்செல்லாம் பெரிதல்ல …. நீ படித்து IAS ஆக வேண்டும் எனக் கூறினார். அம்மாணவனும் அவர் சொல் கேட்டு படித்து தற்போது பாலகிருஷ்ணன் IAS ( தற்போதைய ஒடிசா மாநில முதல்வரின் முதன்மை ஆலோசகர்) ஆக திகழ்ந்து காமராசரின் நன்றி மறவாச் செம்மலாக திகழ்கிறார் என நயம்பட கூறினர்.
அதே போல பதவிக்கு ஆசைப்படாத காமராசரின் பெருந்தன்மையையும், புகழுக்கும் மயங்காத அவரது முதிர்ச்சியையும், ஆடம்பரம் விரும்பாத எளிமையையும், ஆட்சியை நிர்ணயிக்கும் அவரது இராஜதந்திரத்தையும், என்று மக்கள் நலம் பேணும் அவரின் அன்பையும், அறவுணர்வையும் அழகிய நடையில் எடுத்துரைத்து மாணவர்களை பிரமிக்க வைத்தார் முருகானந்தம் . இந்நிகழ்வை தமிழ்த் துறை முதுகலை தமிழாசிரியர் பத்மஜோதி , மற்ற ஆசிரியர்களும் ஒருங்கிணைத்தனர்.