சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ள இருவர் மீது வழக்குப் பதிவு
திருச்சி, ஜூன் 4 திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வாக்களித்த வெளிநாட்டுக் குடியு ரிமை பெற்றுள்ள இருவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
திருச்சி தில்லை நகரைச் சேர்ந்தவர் ரஞ்சனி வைத்தீஸ்வரன் (59). இவர், கடந்த மே 5 ஆம் தேதி மலேசியா செல்ல சென்னை விமான நிலையத்துக்கு சென்றபோது இவர் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றிருப்பதும், அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர் தலில் திருச்சி மேற்குத் தொகுதியில் வாக்களித்ததும் தெரியவந்தது. இதேபோல, திருச்சி பொன்நகர் புதுசெல்வா நகரைச் சேர்ந்த எம். சால்மன் பார்ஷ் (37) கடந்த மே 17ஆம் தேதி வெளிநாடு செல்ல சென்னை விமான நிலையத்துக்குச் சென்றபோது அவர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருப்பதும், அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி மேற்குத் தொகுதியில் வாக்களித்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து குடியேற்றப் பணியக அதிகாரிகள் சென்னை பெருநகர குற்றப் பிரிவு -2 இல் அளித்த புகாரின்பேரில் இருவர் மீதும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதியப்பட்டது. அந்த இரண்டு வழக்குகளும் திருச்சிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை மாற்றப்பட்டு, தில்லைநகர், கண்டோன்மென்ட் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.