ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவிலில் மூலஸ்தான மேற்கூரை மூடும் விழா

0 767
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 31 திருச்சி கே.கே.நகர் காந்திநகர் ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் திருப்பணியில் மூலஸ்தான மேற்கூரை மூடும் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருச்சி கே.கே.நகர் அருகே காந்திநகரில் ஸ்ரீதேவி கருமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. விநாயகர், முருகன், துர்க்கை அம்மன், தட்சிணாமூர்த்தி கருப்பண்ணசாமி, ஆஞ்சநேயர் உள்ளிட்ட தெய்வங்கள் தனி தனி சன்னதிகளில் அருள் பாலித்து வருகின்றனர்.

இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றதாகும். அதற்காக நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவிரி ஆற்றின் அங்காளம்மன் படித்துறையில் இருந்து பால்குடம், பன்னீர் குடம் ஆகியவற்றுடன் திருச்சி மாநகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்து அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறும். இதைத் தொடர்ந்து நடைபெறும் தீமிதி திருவிழா பிரசித்தி பெற்றதாகும். நூற்றுக்கும் மேற்பட்டோர் தீமிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

திருச்சி காந்திநகர், கே.கே.நகர், காஜாமலை, விமான நிலையம், காமராஜர் நகர் என பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர் இந்த திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.இந்நிலையில் இக்கோவில் கும்பாபிஷேகம் முடிவடைந்து 20 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 9 மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டது. இதற்காக ஸ்ரீதேவி கருமாரி அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டது.

முதற்கட்டமாக கோபுரத்துடன் கூடிய மூலஸ்தான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. முழுக்க முழுக்க கருங்கற்களால் கோவில் மூலஸ்தானம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மூலஸ்தானத்தின் மேற்கூரை மூடும் விழா நடைபெற்றது. கிரேன் மூலம் கருங்கல் தூக்கி மேற்கூரையில் வைக்கப்பட்டது. இதற்கு மேல் கோபுரம் கட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மேற்கூரை மூட பயன்படுத்தப்படும் கருங்கற்களுக்கு பூர்வாங்க பூஜைகளை ராஜேஷ் குருக்கள் செய்தார். இந்த விழாவில் தலைவர் இளங்கோவன், தணிக்கையாளர் திருமாறன், துணைத் தலைவர் சி.ரவி, அதிமுக வட்ட செயலாளர் சரவணன், ஊர் முக்கியஸ்தர்கள், கோவில் நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள், ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கும்பாபிஷேக திருப்பணிகள் ரூ.40 லட்சத்தில் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பரிவார தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதி அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது. ஊர் முக்கியஸ்தர்கள், கோவில் நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள் கும்பாபிஷேக திருப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்கள், பக்தர்கள், உபயதாரர்கள் கோவில் திருப்பணிக்கு கைங்கரியம் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் தை மாசம் கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.