சுயநினைவின்றி கிடந்த முதியவரை மீட்ட தொண்டு நிறுவனத்தினர்
திருச்சி மத்திய பஸ்நிலையத்தில் புதுக்கோட்டை பஸ்கள் நிற்கும் இடத்தில் சுமார் 60 வயது முதியவர் ஒருவர் கடந்த 3 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சுயநினைவின்றி கிடந்தார். இதுபற்றி அங்குள்ளவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.
ஆனால் அவர் அருவருப்பான நிலையில் இருந்ததால், அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்ல அவர்கள் முன்வரவில்லை. இதுபற்றி அறிந்த தனியார் தொண்டு நிறுவனத்தினர், திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி தலைமையிலான போலீசார் உதவியுடன் அந்த முதியவரை மீட்டு, அவரை சுத்தம் செய்து, புதிய ஆடை அணிவித்து, திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இதுபற்றி கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.