மணப்பாறையில் நடைபெற்ற முதலமைச்சர் பிறந்தநாள் விழா
திருச்சி,ஏப். 28 திருச்சி மாவட்டம், மணப்பாறையில் திருச்சி தெற்கு மாவட்ட திமுகவின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 ஆவது பிறந்தநாள் விழா வாழ்த்தரங்ம் தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது.
இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசுகையில், நான் முதல்வன் திட்டத்தை உருவாக்கிய போது அந்த திட்டத்தில் திமுக சார்ந்தவர்கள்தான் பயன் பெற வேண்டும் என்பதற்கா அல்ல இது இளைய சமுதாயத்திற்கான திட்டம். நான் மட்டும் முதல்வன் அல்ல நம் இளைய சமுதாயம் அனைவரும் முதல்வன் தான் என்று கொண்டுவரப்பட்ட திட்டம் அது. இன்றைக்கு யுபிஎஸ்சி தேர்வில் கடந்த காலங்களில் குறைந்த அளவிலேயே தேர்ச்சி பெற்ற நிலையில் இன்றைக்கு 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது துணை முதல்வர் அவர்களால் முன் மாதிரியான சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டுள்ளது. குழந்தைகளின் பெற்றோர்கள் கல்வி மற்றும் விவசாயம் போன்றவற்றிக்கு கடன் வாங்கியிருந்தால் அந்த கடனை வசூல் செய்யும்போது அவர்களை கந்து வட்டி, மீட்டர் வட்டி மூலம் தொந்தரவு செய்தால் ஐந்து வருடம் சிறை தண்டனை என்ற சட்ட முன் வடிவை கொண்டுவந்து மக்களின் நலம் காக்கும் முதல்வரை பெற்றுள்ளோம் என்றார்.
பின்னர் வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். கலாநிதி வீராசாமி பேசுகையில் 1947 ல் தமிழ்நாடு கடைசி இடத்தில் இருந்த நிலையில் இன்றைக்கு தமிழ்நாடு இந்தியாவில் வல்லமை மிக்க இரண்டாவது மாநிலமாக உள்ளது என்றால் அதற்கு தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள் தான் காரணம். தற்போது பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே நம்பர் ஒன் இடத்தில் இருப்பதற்கு தமிழக முதல்வர்தான் முழுகாரணம். என்றார்.
வாழ்த்தரங்கில் திரைப்பட கவிஞர் சினேகன் பேசுகையில், அடுத்த தலைமுறைகளோடு கைகோர்த்து முதல்வர் சென்று கொண்டிருக்கிறார் என்றால் அவரது திட்டங்களை விட அவர்கள் உள்ளம் இருக்கிறதே அந்த உள்ளம் ஒரு தலைமை ஆசிரியரைப்போல் முதல்வர் இருக்கிறார் என்றால் அவரது செயல்பாடுகளைத் பார்த்து பெருமிதம் கொள்ளும்போது இதுதான் தலைமைக்கு தகுந்த எடுத்துக்காட்டு. இந்த ஆட்சியை நாம் பாதுகாக்க வேண்டும், இந்தத் முதல்வரை பாதுகாக்க வேண்டும், எவ்வளவு பெரிய போராட்டத்திலும் நிலைகுலையாமல் இருப்பதற்கு காரணம் உங்களைப்போல் பெரியவர்கள் தான் என முதல்வரை பெருமிதப்படுத்தினார்.
இதனைத்தொடர்ந்து பேசிய சின்னத்திரை பிரபலம், நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து பேசுகையில், பஸ்ஸில் சென்றால் பத்து ரூபாய் இருபது ரூபாய் வேண்டும் என்று சொல்லித்தான் கிராமத்து பெண்கள் நகரத்திற்குள்ளேயே செல்லாமல் இருந்தனர். அவர்களிடம் உங்கள் அப்பன் வீட்டு பஸ்ஸா என நகைச்சுவைக்காக கேட்கப்பட்ட காலம்போய் இன்றைக்கு எங்கள் அப்பன் வீட்டு பஸ்சுதான் என்று பெண்கள் தைரியமாக சொல்ல வைத்தவர் தமிழக முதல்வர் என நகைச்சுவையாக பேசி அனைவரையும் ரசிக்க வைத்தார். விழாவில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.