திருச்சி தென்னூர் அண்டகொண்டான் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். சாக்கு தைக்கும் தொழிலாளி. இவருடைய மகள் சங்கீதா(20). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக மனஉளைச்சலில் இருந்த சங்கீதா நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறிது நேரத்துக்கு பிறகு வீடு திரும்பிய பெற்றோர் வீட்டில் சங்கீதா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். உடனடியாக இது குறித்து தில்லைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே சங்கீதாவை காதலித்து வந்த பாலக்கரை எடத்தெருவை சேர்ந்த சரவணக்குமார் என்பவர் அவரை திருமணம் செய்ய மறுத்ததாகவும், இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டினார்கள். மேலும், அவரது தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்று கூறி சங்கீதாவின் உறவினர்கள் மற்றும் திராவிடர் விடுதலை கழகத்தினர், மனிதஉரிமை பாதுகாப்பு மையத்தினர் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து சங்கீதாவை தற்கொலைக்கு தூண்டியதாக சரவணக்குமார், அவரது தந்தை மூர்த்தி மற்றும் 3 பேர் உள்பட மொத்தம் 5 பேர் மீது தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.