கட்டிடத் தொழிலாளி சடலமாக மீட்பு : குற்றவாளியை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியல்
திருச்சி, நவ.13 மணப்பாறை அருகே கட்டிடத் தொழிலாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியை கைது செய்யக்கோரி உறவினர்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சீகம்பட்டியைச் சேர்ந்தவர் கருணாநிதி (38). கொத்தனாரான இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கட்டிட மேஸ்திரியை பார்த்துவிட்டு வருவதாகக்கூறி வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் இன்று கோவில்பட்டி சாலையில் உள்ள மணப்பட்டி அருகே பாலத்திற்கு அடியில் தேங்கிக் கிடந்த நீரில் கருணாநிதி சடலமாக கிடந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று தீயணைப்புத்துறையினர் உதவியுடன் பாலத்தின் குழாய் உள்ளே கிடந்த சடலத்தை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த மணப்பாறை போலீசார் கொலை செய்யப்பட்டாரா என விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே கருணாநிதி உயிரிழப்பிற்கு காரணமானவரை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மணப்பாறை – விராலிமலை சாலையில் அரசு மருத்துவமனை முன்பு தரையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது தங்களது கோரிக்கை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் இரண்டு மணி நேரமாக போராட்டத்தை கைவிடாத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மணப்பாறை டி.எஸ்.பி., காவியா பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது கட்டிட மேஸ்திரியிடம் விசாரணை நடத்தி வருவதாகவும், இவ்வழக்கில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் சமாதானமடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். மறியல் போராட்டத்தால் மணப்பாறை – விராலிமலை சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.