லாரியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் ஆசாத்தெருவை சேர்ந்தவர் நேசன்(வயது 58). சுமைதூக்கும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் திருச்சி குட்செட்யார்டில் சரக்கு ரெயிலில் இருந்து லாரியில் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது, மழை வந்ததால் அரிசி மூட்டைகள் நனையாமல் இருக்க தார்ப்பாய் போட்டு மூடிக்கொண்டிருந்தபோது, அவர் லாரியில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.