பெரிய தெப்ப திருவிழாவில் 3400 மாடங்களில் தீபம்
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள பெரிய தெப்பக்குளத்தில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு3400 மாடங்களில் தீபமேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.முன்னதாக தெப்பக்குளத்தின் முன்பாக சுவாமி , அம்பாள் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

நிகழ்வில் நகர்மன்ற தலைவர் செல்வராணி பங்கேற்று திருவிளக்கேற்றி தீபத்திருவிழாவை துவக்கி வைத்தார் பின்னர் பெரிய தெப்பக்குளத்தில் உள்ள 3400க்கும் மேற்பட்ட மாடங்களில் வைக்கப்பட்டிருந்த அகல் விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது . தெப்பக்குளத்தின் நடுமண்டபம் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான தீபங்களில் ஒளியில் ஜொலித்த பெரிய தெப்பக்குளத்தை துறையூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்து பொதுமக்கள் குடும்ப சகிதமாக வந்திருந்து கண்டு களித்தனர் . அதனைத் தொடர்ந்து அருகே உள்ள நந்திகேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு உற்சவ மூர்த்திகளான சோமாஸ்சுந்தர் மற்றும் மஹாசம்பத்கௌரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, மலர்களால் அலங்காரம் செய்து , கேடயத்தில் வைத்து ,மேளதாளங்கள் முழங்க மாட வீதியில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கோவிலின் பிரதான கிழக்கு வாசலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு , உற்சவ மூர்த்திகளுக்கு மஹா தீபாராதனை காண்பித்த பின் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியின் போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அக்னிரூபமான ஜோதியை அரோகரா கோஷம் முழங்க பயபக்தியுடன் பக்தர்கள் வழிபட்டனர்.