துறையூர் பேருந்து நிலையம் புதுப்பிப்பு பணிகள் தாமதம்: தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டம்
திருச்சி, செப். 10 திருச்சி துறையூர் அண்ணா பேருந்து நிலையம் புதுப்பிப்பு நிதி ஒதுக்கீடு – பணிகள் தாமதம்; கவுன்சிலர்கள் போராட்டம்
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள அண்ணா பேருந்து நிலையம், தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும் முக்கியமான போக்குவரத்து மையமாகும். நீண்ட காலமாக இந்த பேருந்து நிலையம் பராமரிப்பு இன்றி சீர்குலைந்த நிலையில் இருந்து வந்தது. பயணிகள் வசதிக்காக பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுந்து வந்தது.
இதனைத் தொடர்ந்து, பேருந்து நிலையத்தை நவீன வசதிகளுடன் புதுப்பிக்க மாநில அரசு சார்பில் சுமார் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அந்த பணிக்கான பூமி பூஜை இரண்டு மாதங்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் நடைபெற்றது. இதன் மூலம் விரைவில் புதுப்பிப்பு பணிகள் துவங்கும் என பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்தனர்.
ஆனால், இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் எந்தவிதமான அடிப்படை பணிகளும் தொடங்கப்படவில்லை. நிதி ஒதுக்கப்பட்டும், கட்டுமான நடவடிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில், துறையூர் நகராட்சியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர்கள் கார்த்திகேயன், சுதாகர் உள்ளிட்ட பலர், நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நகராட்சி ஆணையர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேருந்து நிலையம் புதுப்பிப்பு பணிகள் விரைந்து துவங்க வேண்டும், நிதி முறையாக பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும், பணிகள் தொடர்ந்து தாமதமாகினால் தீவிரமான போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
இதனால், துறையூர் பகுதியில் பொதுமக்களும், பேருந்து பயணிகளும் அதிருப்தி அடைந்துள்ளனர்.