லஞ்சம் பெற்ற வழக்கில் தொழிலக பாதுகாப்பு இயக்குநருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை

0 352
Stalin trichy visit

லஞ்ச வழக்கில் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்ற முன்னாள் மாநில தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையின் இயக்குநர்

கடந்த 12.12.2008 இரவு சுமார் 7.30 மணியளவில் அப்போதைய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு DSP அம்பிகாபதிக்கு அலுவலக தொலைபேசியில், அப்போதைய சென்னை தொழிற்சாலைகளின் தலைமை ஆய்வாளர் (தற்போதைய பதவிநிலை இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், சென்னை) இளங்கோவன் என்பவர் திருச்சி ஃபெமினா ஹோட்டலில் தங்கியிருப்பதாகவும் அவர், தூத்துக்குடி Sterlite நிறுவனத்தில் நடந்த விபத்து தொடர்பாக மூடப்பட்டிருக்கும் அந்த நிறுவனத்தை மீண்டும் இயக்குவதற்கு உத்தரவு இடுவதற்காக லஞ்சமாக 5 லட்சம் இளங்கோவன் முதலில் கேட்டும் அதற்கு அட்வான்சாக 2 லட்சம் பெற்றுக் கொள்ளப்போகிறார் என்றும், மேற்படி இளங்கோவனுக்கு 2 லட்சம் லஞ்சம் அட்வான்சாக கொடுப்பதற்கு Sterlite நிறுவனத்தின் மேலாளர்கள் சற்குணன் மற்றும் ஜோசப் பீரீஸ் ஆகிய இருவரும் திருச்சி வந்து இரவு 10 மணிக்கு கொடுக்கப்போகிறார்கள் என்று கிடைத்த தகவலின்பேரில், DSP திரு.அம்பிகாபதி  அவரது உயரலுவலர்களின் அனுமதியின்பேரில், ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் எடுத்த நடவடிக்கையின்பேரில் மேற்படி இளங்கோவன், முன்னாள் இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், சென்னை என்பவர் 2 லட்சம் லஞ்சமாக பெற்றபோது கையும் களவுமாக பிடிக்கப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

மேற்படி வழக்கானது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு கடந்த 15 வருடங்களாக நீதிமன்ற விசாரணையில் இருந்து வந்த நிலையில், இந்த வழக்கானது தற்போது திருச்சி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை முடிவுற்று இன்று 13.10.2023 திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.கார்த்திகேயன் அவர்களால், எதிரி இளங்கோவன், முன்னாள் இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், சென்னை என்பவர் லஞ்சப்பணம் கேட்ட குற்றத்திற்காக ஓராண்டு கடுங்காவல் தண்டனையும் மற்றும் ரூ.10,000/-ம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனையும், அரசு பதவியை தவறாக பயன்படுத்தி லஞ்சப்பணம் கேட்டுப்பெற்ற குற்றத்திற்காக 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.20,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்ததோடு, மேற்கண்ட தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் தீர்ப்பளித்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து எதிரி இளங்கோவன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேற்படி வழக்கினை திருச்சி லஞ்ச ஒழிப்புப்பிரிவின் தற்போதைய DSP மணிகண்டன் , உதவி ஆய்வாளர் பாஸ்கரன்மூலம் திறம்பட சாட்சிகளை ஆஜர் செய்தும் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞராக சுரேஷ்குமார் அவர்களால் திறம்பட வழக்கை நடத்தியும் குற்றவாளி இளங்கோவனுக்கு உரிய தண்டனை பெற்றுத்தந்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.