மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி – விதிகளுக்குப் புறம்பாகஆசிரியர்களை கட்டாயப்படுத்தக் கூடாது – தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கண்டனம்.

0 51
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 17  மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி – விதிகளுக்குப் புறம்பாக ஆசிரியர்களை  கட்டாயப்படுத்தக் கூடாது  – தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கண்டனம்.

மத்திய அரசு மேற்கொள்ளும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான பயிற்சி வகுப்பு முசிறியில் இன்று தொடங்கியது. இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்களுக்கான மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் முறையாகப் பின்பற்றவில்லை என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில துணை பொதுச் செயலாளர் கோ.நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –
மத்திய அரசால் நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது நீண்ட கால அவகாசம் மற்றும் மிகுந்த உழைப்பை கோரும் ஒரு பணியாகும். இந்தப் பணிக்காக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பயன்படுத்த மத்திய அரசு வரையறைகளை வகுத்துள்ளது. அதில், ஆசிரியர்களின் நலன் கருதி கீழ்க்கண்ட விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன .55 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களைப் பணியமர்த்தக் கூடாது. பணி ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்களைத் தவிர்க்க வேண்டும். மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களைப் பணியில் ஈடுபடுத்தக் கூடாது. ஆனால், தற்போது நடைபெற்று வரும் பயிற்சி வகுப்பில், மேற்கூறிய விதிமுறைகளையும் பின்பற்றாமல், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் உடல்நலம் குன்றிய ஆசிரியர்களுக்கும் கணக்கெடுப்பு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் இந்தச் செயலால் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலுக்கும், உடல் ரீதியான பாதிப்புகளுக்கும் உள்ளாகி வருகின்றனர்.
எனவே திருச்சி மாவட்ட ஆட்சியர் இதில் உடனடியாகத் தலையிட்டு, ஆசிரியர்களுக்கு இழைக்கப்படும் இந்த அநீதியைக் களைந்து, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தகுதியான ஆசிரியர்களுக்கு மட்டும் பணி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அப்போது சங்க நிர்வாகிகள் சம்சுதீன், பாலகிருஷ்ணன், குமரகுருபன், ஞானமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.