நீதிபதி பதவிநீக்க தீர்மானத்தில் தி.மு.க. எம்.பிக்களின் கையொப்பம் போலி : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
திருச்சி, டிச.22 திருச்சியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்ற “தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற மக்கள் சந்திப்பு நேற்று (டிச.21) யாத்திரை நடந்தது. அதில் பங்கேற்க வந்த மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில், சத்துணவு பணியாளர்கள் சங்கத்தை 200 பேர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.
அப்போது சத்துணவு பணியாளர் சங்கம் மட்டுமின்றி ஜாக்டோ ஜியோ போன்ற சங்கங்களும் திமுக மீது கடும் அதிர்ச்சியில் இருப்பதால் போராட்டங்கள் நடத்தி வருகின்றன அந்த சங்கங்களும் விரைவில் பாரதிய ஜனதா கட்சியில் இணையும் நிலை வரும் என்று தெரிவித்தார் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாட்களாக நெல்லையில் முகாமிட்டு மருத்துவமனைகளை துவங்கி வைத்திருக்கிறார். அதில் 60% பங்கு மத்திய அரசுக்கு இருக்கிறது. மருத்துவமனை திறப்பு விழாவிற்கு மத்திய அமைச்சர்களை அழைத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக்குவோம் என்றனர். ஆனால் அதில் குளறுபடிகள் தான் அதிகம் ஏற்படுத்தி உள்ளனர். தற்போது பாரதப் பிரதமரின் முயற்சியால் 125 நாட்கள் வேலை என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விவசாய காலங்களை தவிர்த்து மற்ற காலங்களில் உறுதியாக 125 நாட்கள் வேலை வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை மோடி கொடுத்திருக்கிறார். ஆனால், மகாத்மா காந்தி பெயரை மாற்றி விட்டனர் என்று குறை கூறுகின்றனர். உண்மையிலேயே மதசார்பின்மையை நீங்கள் கடைபிடிக்கிறீர்களா என்பதை சொல்லியாக வேண்டும். மதசார்பின்மை என்ற பெயரில் தவறான கொள்கையை கடைப்பிடித்துக் கொண்டு இருக்கிறீர்கள். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் தேர்தலில் மக்கள் உங்களுக்கு சரியான தீர்ப்பு வழங்குவார்கள்.
மக்களுக்கு 100 நாட்கள் வேலை கொடுப்பதுதான் முக்கியம் பெயர்முக்கியமல்ல. தலைவர்கள் பெயரை ஏதோ ஒரு இடத்தில் வைத்தால் போதுமானது. 100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம் என்பதையெல்லாம் ஒரு குறையாக சொல்ல முடியாது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை முறையாக செய்ய வேண்டியது முதல்வரின் கடமை. விஜய் என்ன சக்தி என்பது நமக்கு எப்படி தெரியும்? அவர் தூய சக்தியா என்பதை தேர்தலில் மக்கள் தான் சொல்ல வேண்டும்.விஜயின் நோக்கம் திமுக இருக்கக் கூடாது என்பதுதான். தேர்தலில் எத்தனை முனை போட்டி இருந்தால் திமுகவை வீழ்த்த முடியும் என்பதை உணர்ந்து விஜய் செயல்பட்டால் நல்லது. எம்ஜிஆரை போல் எல்லோரும் கட்சி ஆரம்பித்து எல்லோரும் ஆட்சியைப் பிடித்து விட முடியாது. வரும் தேர்தல் எங்களுக்கு பாதகமாக இருக்காது. சாதகமாகவே இருக்கும் .
கடந்த தேர்தலில் எங்கள் கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது.
தற்போது தமிழகத்தில் உள்ள சூழ்நிலையை பொருத்தவரை, பீகாரில் வீசும் காற்று தமிழகத்திற்கு வந்து சேரும். உலக அளவில் மிகப்பெரிய கட்சியான பா.ஜ., கட்சி யாரையும் கூட்டணிக்கு அழைக்காது. த.வெ.க.வுக்கு தேவைப்பட்டால் கூட்டணியில் இணைந்து கொள்ளலாம். பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துவிட்டு முதல்வரின் நிகழ்ச்சிகளை நடத்தும் சம்பவங்கள் தமிழகத்தில் நடந்திருக்கின்றன.
தமிழகத்தில் 208 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேர்க்கை இல்லாத நிலை உள்ளது. தமிழகத்தில் டிஜிபியை கூட நியமிக்க முடியாத நிலை உள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதிக்கு எதிராக போலி கையெழுத்து போட்டு தீர்மானம் கொண்டு வந்துள்ளதால், நிச்சயம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும். தற்கொலையின் தலைநகரமும் திருச்சியாகத்தான் இருக்கிறது. தமிழகத்தில் 17 அமைச்சர்கள் மீது வழக்கு உள்ளது. அதில் தீர்ப்பு வெளியாகும் போது சன் டிவியில் பெரிதாக போட வேண்டும் அதை தயாநிதி மாறன் பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.