விபத்தில் தம்பதி பலி வழக்கில் டிரைவர்களுக்கு 2 ஆண்டு சிறை!
திருச்சி அரியமங்கலம் மலையப்பநகர் ஜீவானந்தம் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 45). கட்டுமான நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி அதிகாலை கோவை செல்வதற்காக தன் மனைவி உமா மகேஸ்வரியுடன் புறப்பட்டார். இருவரும்
திருச்சி அரியமங்கலம் எஸ்ஐடி கல்லூரி பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி சென்ற டிப்பர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதியது. இரு வாகனங்களும் பஸ்சுக்கு காத்திருந்த செந்தில்குமார், உமா மகேஸ்வரி மீது மோதியதில் 2 பேரும் இறந்தனர். இதுகுறித்து மாநகர தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் டிப்பர் லாரி டிரைவர் கரூர் தான்தோன்றிமலை கருப்பாக்கவுண்டனூரைச்
சேர்ந்த நாகராஜ்(வயது 38). கார் டிரைவர் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையைச் சேர்ந்த புஷ்பராஜ்(வயது 43) ஆகியோர் மீது வழக்குப்பதிந்தனர். இந்த வழக்கு திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் ஹேமந்த் ஆஜரானார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டிரைவர்கள் நாகராஜ், புஷ்பராஜ் ஆகிய 2 பேருக்கும் நீதிபதி சாந்தி, தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.