ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு : திமுக நிர்வாகி மீது அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு

0 16
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான இடத்தை திமுக நிர்வாகி ஆக்கிரமித்து வைத்துள்ளதற்கு ஆதாரம் உள்ளது. சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் –

திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் கோயில் நிலங்கள், சொத்துக்களை அபகரித்துள்ளனர் என்பது குறித்த ஆதாரங்களை ஆன்மீக அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் வழங்கினால், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் –
இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் பேட்டி.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர்
கோயில் முன்பு இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில்:-

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமாக கடந்த 1866 ஆம் ஆண்டு 329 ஏக்கர் நிலங்கள் உள்ளதாக ஆவணங்கள் உள்ளன. மேலும், 1910 மற்றும் 1930 ஆம் ஆண்டு பதிவேடுகளிலும் இவை கோயில் சொத்துக்களாகவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி திமுக பகுதி செயலாளர் ராம்குமார், முறையான மூலப் பத்திரங்கள் ஏதுமின்றி, போலி ஆவணங்களைத் தயாரித்து கோயில் நிலத்தைத் தன் பெயருக்கு மாற்றி அங்கு கட்சி அலுவலகம் நடத்தி வருகிறார்.

முறைகேடு செய்யப்பட்டுள்ள இந்த நிலத்தின் இன்றைய சந்தை மதிப்பு ரூ. 50 கோடி ஆகும். துறை அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமல் ஒரு சாதாரண பகுதி செயலாளரால் இவ்வளவு பெரிய மோசடியில் ஈடுபட முடியாது என்பதால், இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாகத் கிடைக்கப்பட்டுள்ள உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில், ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மூலம் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, தற்போது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணை தற்போது தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட எவரும் தப்பிக்க முடியாது.

தமிழக முதல்வர் விஜய் கோயில்களின் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக உள்ளார். ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும், எனது தொகுதி மக்களின் நலனுக்காகவும் கோயில் சொத்துக்களை மீட்டெடுக்கவும் இந்த விவகாரத்தில் இறுதி வரை போராடுவேன்.

தமிழ்நாடு முழுவதும் கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் திமுகவினர் எங்கு நிலங்களை அல்லது கோயில் சொத்துக்களை அபகரித்துள்ளனர் என்பது குறித்த ஆதாரங்களை ஆன்மீக அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் வழங்கினால், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.