முழு விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்யக்கோரி 24 – ந் தேதி சென்னை தலைமைச் செயலகம் முற்றுகை: விவசாய சங்கங்கள் அறிவிப்பு
திருச்சி செப் 19-திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் பூ. விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு முழு விவசாய கடன் தள்ளுபடி செய்வோம் என்றும் 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50% விவசாய கடன் தள்ளுபடி செய்வோம் என்றும் வாக்குறுதி அளித்தார். ஆனால் தற்போது ஒரு லட்சத்திற்கும் கீழ் விவசாய கடன் பெற்றிருப்பின் ரூபாய் 75 ஆயிரம் விவசாய கடன் தள்ளுபடி என்றும், ஒரு லட்சத்திற்கும் மேல் விவசாய கடன் பெற்றிருப்பின் ரூபாய் 35 ஆயிரம் விவசாய கடன் தள்ளுபடி என்றும் அறிவித்து 17 நிபந்தனைகளை விதித்து விவசாய கடன் வசூலில் ஈடுபட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.
குறிப்பாக விவசாய கடன் முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் கடும் மழை மற்றும் வெயிலிலும், பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை ஒடுக்கும் விதமாக காவல்துறையினர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இத்தக நடவடிக்கையை வேடிக்கை பார்க்கும் மாநில அரசுக்கு விவசாயிகள் சங்கங்கள் சார்பாக கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
மேலும் தேர்தல் வாக்குறுதியின் படி உடனடியாக விவசாயிகள் பெற்ற பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கு தமிழ்நாடு முதல்வர் விஜய் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து மாநில அரசு விவசாயிகளை ஒடுக்கும் விதமாகவும், நசுக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது. ஆகையால் இத்தகைய போக்கை கண்டித்து வரும் 24ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தை 20க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம்.
மேலும் விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக அரசு பேச்சுவார்த்தை நடத்தும் போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களின் தலைவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். குறிப்பிட்ட விவசாய சங்கங்களை அழைத்து மட்டும் பேச்சுவார்த்தை நடத்தினால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது. ஆகையால் அனைத்து விவசாய சங்கங்களின் தலைவர்களை அழைத்து உடனடியாக மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
பேட்டியின் போதுசெல்லமுத்து,தனபாலன்,அங்கமுத்து உள்பட 20 விவசாய சங்க தலைவர்கள் உடன் இருந்தனர்