தனியார் பள்ளியில் “என்னுள் கலாம்” அறிவியல் கண்காட்சி
திருச்சி, ஜன.8 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே குளித்தலை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் “என்னுள் கலாம்” என்ற அறிவியல் கண்காட்சி நேற்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 20 அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் பயிலும் மழலையர் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் கலந்துகொண்டு 610 க்கும் மேற்பட்ட பல்வேறு விதமான புதிய, புதிய அறிவியல் படைப்புகளை சமர்பித்தனர்.
இதில் மழலையர்களும் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தி அதுகுறித்து தங்களது மழலை மொழியில் விளக்கம் அளித்து ஆச்சர்யப்படுத்தினர். சோலார் எனர்ஜி மூலம் வாகனங்கள் இயக்குவது, சுற்றுப்புற மாசு, மழைநீர் சேகரிப்பு, சோலார் மின்சக்தி, மனித உடல் பாகங்களின் இயக்கம், பாரம்பரிய விளையாட்டுகள், ஹைட்ராலிக் எனர்ஜி, மின் சேமிப்பு உள்ளிட்ட நூற்றுக்கணக்கான புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலில் வெளிப்படுத்தியிருந்தனர். திருச்சி அண்ணா கோளரங்கத்தின் திட்ட இயக்குனர் அகிலன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களிடையே அறிவியல் சிந்தனைகளை எவ்வாறு புகுத்துவது மேலும் அறிவியல் படைப்புகளை எவ்வாறு நடைமுறை பயன்பாட்டிற்கு எடுத்துச் செல்வது என விளக்கினார்.
இதில் மாணவர்களின் சிந்தனைத் திறன், படைப்பாற்றல் மற்றும் விளக்கமளித்தல் உள்ளிட்டவைகள் மூலம் சிறந்த படைப்புகள் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டன. மழலையர் முதல் 9 ம் வகுப்புவரை வகுப்பு வாரியாக மூன்று அறிவியல் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பதக்கங்களும் பரிசுக் கோப்பைகளுடன் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. கண்காட்சியில் சிறந்த முறையில் தங்களது பங்களிப்பை வெளிப்படுத்திய அனந்தனூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சிறப்பு பரிசு பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.
பள்ளி தாளாளர் அரவிந்த் ஒட்டுமொத்தமாக முதல் பரிசு பெற்ற மாணவன் கணேஷ்சுக்கு வெற்றிக்கோப்பை மற்றும் பணப்பரிசும் வழங்கினார். பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை கூட்டும் வகையிலும் அவர்களை ஊக்கப்படுத்துவதற்காகவும் இந்த கண்காட்சி நடத்தப்பட்டதாகவும், இதில் அதிகளவில் மழைலையர்களும், அரசுப்பள்ளி மாணவர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டது வியப்பையும், மகிழ்வை ஏற்படுத்தியுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.