ஆவின் நிர்வாகத்தை கண்டித்து பாலை கொட்டி விவசாயிகள் போராட்டம்
திருச்சி, செப். 19 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் பாலை ஊற்றி ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு விவசாய சங்கங்களில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியம் சேரப்பட்டியில், பால் பண்ணை அமைக்க வேண்டும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்து பால்வளத்துறை அமைச்சர், திருச்சி மாவட்ட பதிவாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இன்று வரை பால்பண்ணை அமைக்காமல் இருக்கின்றனர்.
இதனை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது,
விவசாயிகள் தலையிலும், தரையிலும் பாலை ஊற்றி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலை தரையில் ஊற்றி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக விவசாயிகள் கலைந்து சென்றனர்.