திருவெறும்பூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளையடித்த வழக்கில் ஒரு பெண் உட்பட 4 பேர் கைது; தனிப்படை போலீசார் அதிரடி!
திருவெறும்பூர் பகுதிகளில் வீட்டின் பூட்டுகளை உடைத்து தொடர் கொள்ளையடித்த வழக்கில் ஒரு பெண் உட்பட 4 பேரை திருவெறும்பூர் தனிப்படை போலீசார் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்து 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள 60 பவுன் நகை ஒரு கார் இரண்டு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
திருவெறும்பூர் உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டூர், அம்மன் நகர், பெல் குடியிருப்பு உள்ளிட்ட பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வந்தது.

இந்த நிலையில் திருச்சி மாவட்ட எஸ்பி மூர்த்தி உத்தரவின் பேரில் திருவெறும்பூர் டிஎஸ்பி சுரேஷ்குமார் மேற்பார்வையில் திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் துரைராஜ், துவாக்குடி இன்ஸ்பெக்டர் ஞானவேலன், சப் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், வேலழகன் மற்றும் குற்றப்பிரிவு காவலர்கள் ஹரிஹரன், அன்புமணி, விஜயகுமார், நல்லேந்திரன், ராஜேஷ் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தொடர் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில் கொள்ளை நடந்த இடத்தில் கிடைக்கப்பெற்ற, கைரேகை மற்றும் சிசிடிவி காட்சி போன்ற தடயங்களில் அடிப்படையில் திருட்டு, கொலை, கொள்ளைகள் வழக்கில் தொடர்புடைய கரூர் லாலப்பேட்டை காவல் சரகத்தை சேர்ந்த சங்கர் (எ) வெட்டு சங்கர் (34) மற்றும் கோபால் ( எ) கருப்பத்தூர் கோபால், தொட்டியம் கொளக்குடியை சேர்ந்த செல்வகுமார் (40) என்பதை கண்டுபிடித்தனர்.

இதில் கருப்பத்தூர் கோபால் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டு இறந்து போனார். இந்நிலையில் அம்மன் நகர் பகுதியில் சுற்றித்திரிந்த சங்கர் மற்றும் செல்வக்குமார் ஆகிய இருவரை திருவெறும்பூர் தனிப்படைபோலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளையடித்த அனைத்து நகைகளும் கருப்பத்தூர் கோபால் மனைவி பொன்மணியிடம் (36)இருப்பது தெரியவந்தது .
அதன் அடிப்படையில் பொன்மணியை கைது செய்ததோடு, அவருடன் தொடர்புடைய தொட்டியத்தை சேர்ந்த ஜெகன் (46) உட்பட 4 பேரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து திருவெறும்பூர், பெல், நவல்பட்டு பகுதியில் கொள்ளையான ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான 60 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள், LED டிவி, மீட்கப்பட்டன.
மேலும் கொள்ளைக்கு பயன்படுத்திய கார் ,இரண்டு சக்கர வாகனங்கள், மற்றும் கடப்பாறை, கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கைது தனிப்படை போலீசாரைதிருச்சி
எஸ் பி மூர்த்தி பாராட்டினார்.