முசிறி அருகே திமுக நிர்வாகி வீட்டில் பரிசு பொருள்கள் பறிமுதல்
திருச்சி, ஏப். 1 முசிறி அருகே நாச்சம்பட்டி கிராமத்தில் திமுக நிர்வாகி வீட்டில் இருந்த ஏராளமான பரிசுப் பொருட்களை தேர்தல் அலுவலர்கள் கைப்பற்றியுள்ள சம்பவத்தால் பரபரப்பு
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தொகுதிக்குட்பட்ட நாச்சம்பட்டி கிராமத்தில் திமுக நிர்வாகி வீட்டில் இருந்து ஏராளமான பரிசுப் பொருட்கள் கைப்பற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துணை வட்டாட்சியர் மூர்த்தி என்பவருக்கு முசிறி அருகே நாச்சம்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் பரிசு பொருட்கள் பதுக்கி வைத்து கொடுப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு பறக்கும் படை அலுவலர் ஜான்பாண்டியன் மற்றும் போலீசார் உடன் சென்று நேரில்ஆய்வு செய்துள்ளார். அப்போது நாச்சம்பட்டி கிராமத்தில் திமுக நிர்வாகி அய்யாவு என்பவரது வீட்டில் சுமார் 2800 சில்வர் செட் டப்பா மற்றும் 2800 கிலோ சர்க்கரை ஆகியவை 310 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்தது. இதன் மதிப்பு ரூ 11 லட்சத்து 70 ஆயிரம் ஆகும். இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் பரதன் மற்றும் அதிமுக ஒன்றிய செயலாளர் ஆமூர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் சம்பவ இடத்திற்கு வந்து அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் திரண்டு இருந்த கட்சி நிர்வாகிகளை அங்கிருந்து வெளியேற்றினர். இதையடுத்து அய்யாவு வீட்டில் வைத்திருந்த சர்க்கரை மற்றும் சில்வர் செட் டப்பா மூட்டைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து முசிறி காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். இதுகுறித்து பறக்கும் படை அலுவலர் ஜான்பாண்டியன் அளித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் திமுக நிர்வாகி அய்யாவு விரைவில் தனது வீட்டில் நடைபெறவுள்ள காதணி விழா நிகழ்ச்சிக்கு வரும் உறவினர்களுக்கு வழங்குவதற்காக வாங்கி வைத்திருந்த பரிசுப்பொருள் என தெரிவித்திருப்பது தேர்தல் நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.