பசுமைப்பூங்கா பாதுகாப்புகுழு கையொப்ப இயக்கம்
திருச்சி, செப். 29 பசுமைப்பூங்கா பாதுகாப்புகுழு, தண்ணீர் அமைப்பு, எக்ஸ்னோரா உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து மக்களிடையே கையொப்ப இயக்கத்தை தொடங்கின.
திருச்சி பஞ்சப்பூர் அருகேயுள்ள பசுமைப் பூங்காவை மீட்டெடுத்து புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் பொதுமக்களிடையே கையொப்ப இயக்கம் நடைபெறுகிறது.
பஞ்சப்பூர் அருகே பொதுமக்கள் பங்களிப்புடன் பசுமைப் பூங்கா உருவாக்கப்பட்டது. தற் போது, பூங்காவின் ஒரு பகுதியில் காய்கனி சந்தை கட்டப் பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக பூங்காவிலிருந்த நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டி அகற்றப்படுகின்றன. பசுமைப்பூங்காவை அழித்து காய்கனி சந்தை உருவாக்குவதை எதிர்த்து, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், பசுமைப் பூங்காவுக்கு 11 ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும்.
மக்கள் அளித்த நன்கொடையில் உருவாக்கப்பட்ட பூங்காவை மாநகராட்சியும், அரசும் பராமரிக்க வேண்டும். அனைத்து வசதிகளுடன் பசுமைப் பூங்காவை மேம்படுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். பூங்காவில் சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும். பூங்காவுக்கு வரும் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை நிறைவேற்றவும், பூங்காவை சுற்றி சுற்றுச்சுவர் ஏற்படுத்தி, பூங்காவை புனரமைக்க வேண்டும். விரைந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி பசுமைப்பூங்கா பாதுகாப்புகுழு,தண் ணீர் அமைப்பு, எக்ஸ்னோரா உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து மக்களிடையே கையொப்ப இயக்கத்தை வியாழக்கிழமை தொடங்கின.
பசுமைப்பூங்காபாதுகாப்பு குழுவின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் கே.சந்திரசேகர், பிஜுமாத்யூ, துரைசாமி, ஜெயமுருகன் ஆகியோரும், தண்ணீர் அமைப்பின் சார்பில் செயல் தலைவர் கே.சி.நீலமேகம், பால்குணா லோகநாத், தி. நெடுஞ்செழியன், ரகுபதி ஆகியோரும், எக்ஸ்னோரா சார்பில் பாலசுப்ரமணியம், சிவகுமார் ஆகியோரும் பங்கேற்று கலையரங்கம், மத்தியப் பேருந்து நிலையப் பகுதிகளில் பொதுமக்களிடம் கையொப்பம் பெற்றனர்.