திருச்சியில் 20 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் – 5 பேர் கைது
அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க திருச்சி மாநகர காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரப்பட்டது. இந்நிலையில் நேற்று பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பென்சனர் காலனி மற்றும் எடத்தெரு ஆகிய இடங்களில் குடோன்களில் விற்பனைக்காக தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை மற்றும் பாலக்கரை காவல் நிலைய காவலர்கள் அடங்கிய குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூபாய் ரூ.20 இலட்சம் மதிப்புள்ள 55 மூட்டைகளில் இருந்த சுமார் 1800 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தும், திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த பூமிநாதன், காஜா பேட்டை பகுதியைச் சேர்ந்த இளங்கோ , 38/21, பாலக்கரை பகுதியை சேர்ந்த வடிவேல், ஹரிஹரன், அரியமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிகுமார் ஆகிய 5 பேரை கைது செய்து பாலக்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் அவர்கள் குற்றச் செயலுக்குபயன்படுத்தி வந்த ஒரு TATA Ace நான்கு சக்கர வாகனம், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் 4 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்த தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார். மேலும் திருச்சி மாநகரில் குட்கா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல்துறையின் மூலம் எச்சரிக்கப்பட்டுள்ளது.