த.வெ.க.வில் இணைந்தது மகிழ்ச்சி : அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேட்டி
திருச்சி, ஜூலை 6 த.வெ.க.வில் இணைந்தது மகிழ்ச்சி என்று திருச்சி விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், வளர்மதி ஆகியோர் கூறினர்.
அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் மற்றும் வளர்மதி ஆகியோர், நேற்று திருச்சி வருகை தந்தனர். அவர்களுக்கு திருச்சி விமான நிலையத்தில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மாலை அணிவித்தும் பரிசுகள் கொடுத்தும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி…
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சாமானிய மக்களின் ஆதரவை பெற்றுள்ளார். மாற்றத்திற்கான மகா சக்தியாக விளங்கும் முதல்வர் ஆதரவோடு பிரம்மாண்ட இணைப்பு விழா சென்னையில் நடந்தது. புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இருந்து 20 ஆயிரம் பேர் இந்த இனிப்பு விழாவில் பங்கேற்றனர். அதன் பின்னர் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்று இன்று திருச்சி வந்துள்ளேன். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஷ் மற்றும் நிர்வாகிகளை இன்று சந்திக்கிறேன். மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தெளிவாக பிறகு கூறுகிறேன் என்றார்.
முன்னாள் அமைச்சர் வளர்மதி பேட்டி…
தமிழக முதல்வர் நன்றாக ஆட்சி செய்கிறார். அதனால் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தேன். நல்லாட்சி நடப்பதன் காரணமாகத்தான் தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளேன். தற்போது தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஆட்சி சிறப்பாக உள்ளது. அதிமுகவில் தொடர்ந்து எனக்கு பயணம் செய்ய விருப்பமில்லை. திமுக அதிமுக கூட்டணி சேர்வது குறித்து பேசினார்கள். இதன் காரணமாகத்தான் நான் அதிமுகவிலிருந்து வெளியேறி விட்டேன். தற்போதுதான் தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துள்ளேன். திருச்சி கிழக்கில் போட்டியிடுவது குறித்து தலைமை தான் அறிவிக்க வேண்டும். தலைமை அறிவித்தால் அதன் பிறகு பார்க்கலாம் என்றார்.