யூ.ஜி.சி நெட் தேர்வில் கல்லூரி படிக்கும் போதே முதல் முயற்சியில் ஹோலி கிராஸ் கல்லூரி மாணவி சாதனை!
தேசிய தகுதித் தேர்வு அல்லது ‘UGC NET’ என்பது இந்தியாவில் ஒரு தேசிய தகுதி நுழைவுத் தேர்வாகும். பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் சேர்க்கைக்கான முதுநிலைப் போட்டியாளர்களுக்கான தகுதித் தேர்வுகள் இவை. இது தேசிய தேர்வு முகமையால் ஆண்டுக்கு இருமுறை ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த தேர்வில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்கள் பங்கேற்கின்றனர்.
கொரோனா நோய்த் தொற்று காரணமாக டிசம்பர் 2020-ல் நடைபெறவிருந்த யுஜிசி-நெட் தேர்வுகள் நடைபெறவில்லை. டிசம்பர் 2020 மற்றும் ஜூன் 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் தேசிய தேர்வு முகமையால் 20 ஜனவரி 2021 முதல் 5 ஜனவரி 2022 வரை நடத்தப்பட்டன. இதில் 81 பாடத்திட்டங்களுக்கு நாடு முழுவதும் 239 நகரங்களில் உள்ள 837 தேர்வு மையங்களில் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வுகளை எழுதினர்.
இந்த நிலையில் சமீபத்தில் இதன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் உளவியல் படிக்கும் மாணவி கல்லூரியில் படிக்கும்போதே நெட் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் உளவியல் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவி ஜெயஸ்ரீ (வயது 21). சமீபத்தில் நடந்த நெட் தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதுகுறித்து மாணவி ஜெயஸ்ரீ கூறுகையில்…. சிறு வயதிலிருந்தே என்னுடைய பெற்றோர்கள் ஊக்கம் அளித்தனர். பேராசிரியராக வேண்டும் என்பது என்னுடைய கனவு. இதற்காக கல்லூரியில் உளவியல் துறையில் படித்து வந்தேன். தொடர்ந்து கிடைக்கும் நேரங்களில் தேர்விற்காக படித்து வந்தேன்.
கொரோனா கால கட்டங்களில் கிடைக்கும் நேரங்களில் யுஜிசி மற்றும் யுபிஎஸ்சி அரசு தேர்வுகளுக்கும் படித்து வந்தேன். இதனால் முதல் முயற்சியிலேயே என்னால் யுஜிசி நெட் தேர்வில் தேர்ச்சி பெற முடிந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.