பிள்ளைகள் கவனிக்காததால் கணவன் – மனைவி தூக்கிட்டு தற்கொலை
திருச்சி, டிச. 1 திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே பெற்ற பிள்ளைகள் முதுமையில் சரியாக கவனிக்காத விரக்தியில் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போலீசாருக்கும் வருவாய் துறைக்கும் தெரியாமல் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்
கொண்டுள்ளனர்.
தா. பேட்டை அருகே உள்ள பெருகனூர் வடக்கு கொட்டம் பகுதியில் வசித்தவர் உத்தண்டன்(93).
இவரது மனைவி பழனியம்மாள் (84).இருவருக்கும் மகன்கள் உள்ளனர்.
இருப்பினும் தம்பதிகள் தனியாகவே வசித்து வந்ள்ளனர். முதுமை நிலையில் இருந்த இருவரையும் பெற்ற மகன்கள் சரிவர கவனிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த உத்தண்டன் கடந்த 28ஆம் தேதி இரவு வீட்டில் இருந்த உத்திரத்தில் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
காலையில் கணவன் தூக்கில் தொங்குவதை கண்டு மனைவி பழனியம்மாள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டு உள்ளார். அருகில் இருந்தவர்கள் உத்திரத்தில் தொங்கிய உத்தண்டன் சடலத்தை கீழே இறக்கி போட்டு விட்டு அவர் தூக்கிட பயன்படுத்திய கயிற்றை ஓரமாக வீசி எறிந்துள்ளனர்.
அந்த பரபரப்பான சூழலில் கணவர் உத்தண்டன் தூக்கிட்டு உயிர் துறக்க பயன்படுத்திய கயிற்றை எடுத்துச் சென்ற பழனியம்மாள் அருகில் இருந்த கொட்டகையில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உறவினர்கள் மூதாட்டி பழனியம்மாளை தேடிய போது அவரும் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கணவன் இறந்த தூக்கம் தாங்காமல் மூதாட்டியும் தற்கொலை செய்து கொண்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
பின்னர் இருவரின் சடலத்தையும் இடுகாட்டிற்கு எடுத்துச் சென்ற மகன்கள் ஒரு சேர இருவரின் உடல்களையும் தகனம் செய்தனர். இது குறித்து தகவல் வெளியான நிலையில் தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் வழக்கு பதிந்து உத்தண்டன், பழனியம்மாள் இறப்பிற்கான காரணம் குறித்தும் தற்கொலை செய்து கொண்டவர்களை போலீசுக்கு தெரியாமல் அடக்கம் செய்யப்பட்டதன் பின்னணி பற்றியும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.