மாநகர நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
திருச்சி, ஏப். 6 திருச்சி மாநகரில் தேர்தல் பணியில் உள்ள காவலர்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என மாநகர காவல் ஆணையர் ந.காமினி அறிவுறுத்தினார்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, தேர்தல் செலவின பார்வையாளர் சரம்தீப் சின்ஹா ஆகியோர் திருச்சி மாநகரில் செயல்பட்டு வரும் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகளை ஆராய்வதற்காக காவல் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்தனர். அப்போது, திருச்சி மாநகரில் செயல்பட்டு வரும் 1 முதல் 9 வரையிலான சோதனைச் சாவடிகளில் காவல்துறை சார்பில் பொருத்தப்பட்டுள்ள 2 ஏஎன்பிஆர் கேமராக்களும், 2 சிசிடிவி கேமராக்களும் என மொத்தம் 4 கேமராக்களின் செயல்பாடுகளை பார்வையிட்டனர். தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு சோதனை சாவடிக்கும் தலா 4 சிசிடிவி கேமராக்கள் வீதம் 1 முதல் 9 வரையிலான சோதனை சாவடிகளில் பொருத்தப்பட்டு, செயல்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திருச்சி மாநகர நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் சிசிடிவி கேமராக்களை கண்காணிப்பது தொடர்பாக கட்டுப்பாட்டு அறையில் தேர்தல் பணியில் உள்ள காவல் அதிகாரிகள், காவலர்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி அறிவுறுத்தினார்.