திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
இந்திய தேர்தல் ஆணையம் 12-வது தேசிய வாக்காளர் தினத்தினை வருகிற ஜனவரி 25-ந் தேதி நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு 2022-ம் ஆண்டுக்கான விழிப்புணர்வு போட்டிகள் 4 பிரிவுகளில் நடைபெறவுள்ளது.
அதன்படி, 9-ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவ மாணவிகள். பொது மக்கள், மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தவறிய மாணவ மாணவிகள் என 4 நிலைகளில் போட்டிகள் நடைபெறும்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் ஓவியப் போட்டி, சுவரொட்டி தயாரித்தல், வாசகம் எழுதுதல், பாட்டுப் போட்டி, குழு நடனம் மற்றும் கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்கலாம். இந்தப் போட்டிகள் ஜனநாயக நாட்டில் தேர்தலின் முக்கியத்துவம், 100 சதவீதம் வாக்காளராக பதிவு செய்தல், வாக்காளர் உதவிமைய கைபேசி செயலி, தூண்டுதலில்லாமல் வாக்களித்தல், வயது வந்தோர் வாக்காளராக பதிவு செய்தல், ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறும்.
இப்போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறும் 15 போட்டியாளர்களின் விபரம் மாவட்ட தேர்தல் அலுவலகம் மூலம் தலைமை தேர்தல் அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு தலைமை தேர்தல் அலுவலகம் மூலம் பரிசீலனை செய்யப்படும்.
மேலும், 18 வயது பூர்த்தி அடைந்த பொதுமக்கள் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தவறிய மாணவ மாணவிகளுக்கு ‘‘ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு’’ என்ற தலைப்பின் கீழ் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலக இணையதளத்தில் https://www.elections.tn.gov.in/SVEEP2022/Account/Login என்ற முகவரியில் நேரடியாக பங்கு பெறலாம். மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தவறிய மாணவ மாணவிகள் (14 முதல் -17 வயது வரை) தங்களது குடும்பத்திலுள்ள நபரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தி இணையதளம் மூலமாக பங்கு பெறலாம்.
மாவட்ட அளவில் நடைபெறும் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான இப்போட்டிகள் அனைத்தும் வரும் 26ஆ-ம் தேதியுடன் நிறைவு பெறும். சிறந்த 15 போட்டியாளர்களின் விபரம் ஜனசவரி 31-ந் தேதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி முடிவடையும். இப்போட்டிகளில் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தேர்தல் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.