குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் ஒதுக்கீட்டில் முறைகேடு : பா.ம.கவினர் குற்றச்சாட்டு

0 171
Stalin trichy visit

திருச்சி, பிப். 16  திருச்சி பாலக்கரையில் குடிசை மாற்று வாரியத்தில் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட வீடுகள் ஒதுக்கீடு செய்வது முறைகேடு குற்றச்சாட்டு ..

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே பாமகவினர் உள்ளிட்ட பொதுமக்கள் திடீர் தர்ணா போராட்டத்தால் பரபரப்பு…

திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள கல்மந்தை பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஐந்து தலைமுறைகளாக வசித்து வந்த நிலையில், தமிழக அரசு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் புதிய குடியிருப்புகள் கட்டி வழங்குவதாக அறிவித்தது.

அதன்படி பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, மொத்தம் 192 புதிய வீடுகள் கட்டப்பட்டன. இதில் 110 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மீதமுள்ள வீடுகள் தொடர்பாக முறைகேடு நடந்துள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

திமுகவை சேர்ந்த அமைச்சர்கள், மேயர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பல நபர்களிடம் பணம் பெற்று, வேறு பகுதிகளில் வசிக்கும் நபர்களுக்கு வீடுகளை ரகசியமாக விற்பனை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன் விளைவாக, புதிய குடியிருப்பில் வசித்து வந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு “இந்த வீடு எங்களுடையது; 15 நாட்களில் காலி செய்ய வேண்டும்” என வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் திலீப் குமார் தலைமையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே நுழைந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அலுவலக வளாகத்துக்குள் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. “ஏழை மக்களின் வீடுகளை அரசியல் ஆதிக்கத்தால் பறிக்க முயற்சி செய்யப்படுகின்றது” என போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.

பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கும் வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.