சிறைத்துறை முதல்நிலை காவலர் தீக்குளித்து தற்கொலை முயற்சி
திருச்சி மாவட்டம் லால்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த சிறைத்துறை முதல்நிலை காவலர் திடீரென தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை முயற்சி. 84 சதவீத தீக்காயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி.
லால்குடி அருகே செம்பரை சோழமுத்து மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் 45 வயதான ராஜா. இவர் லால்குடி கிளை சிறையில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய தம்பி நிர்மல்.இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கிடையே இட பிரச்சினை மற்றும் குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் முத்துவுக்கும் முதல்நிலை தலைமை காவலர் ராஜாவுக்கும் நிலப் பிரச்சனையில் ஏற்பட்ட அடிதடி சம்பந்தமாக கொடுத்த புகாரின் பேரில் ராஜா மீது வழக்கு பதியப்பட்டு கடந்த 18 -6 -2021 ந்தேதி பணி இடை நீக்கம் செய்து அன்றிலிருந்து இன்று வரை பணியிடை நீக்கத்தில் இருந்து வருகிறார்.இந்நிலையில் கடந்த 25 ம் தேதி ராஜாவின் மனைவி விஜயாவை அவரது தம்பி நிர்மல் மதுபோதையில் திட்டி உள்ளார். இது சம்பந்தமாக இருதரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் லால்குடி காவல்நிலையத்தில் ராஜாவின் மனைவி விஜயா மற்றும் நிர்மல் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் மனு ரசீது போட்டுள்ளனர். இந்த புகார் சம்பந்தமாக நேற்று விசாரணைக்கு வந்த ராஜாவை லால்குடி காவல் நிலையத்தில் இருந்த ஒரு காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் சிறைத்துறை முதல்நிலை காவலர் ராஜாவை நாற்காலியோடு எட்டி உதைத்ததாகவும், விசாரணையில் ஒருதலைப் பட்சமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.இதில் அவர் மிகுந்த மன உளைச்சல் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் நேற்று அண்ணன் தம்பிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து புகார் அளிக்க லால்குடி காவல் நிலையத்திற்கு முதல் நிலைக் காவலர் ராஜா வந்துள்ளார். பின்னர் திடீரென தான் வைத்திருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் கண்ட போலீசார் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீக்காயங்களுடன் அவரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 84 சதவீதம் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து லால்குடி போலீசார் விசாரணை செய்துவரும் நிலையில் லால்குடி காவல் நிலையத்திற்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த முதல்நிலை காவலர் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.