மணப்பாறை அருகே குதிரை எடுப்பு திருவிழா
திருச்சி, ஆக.11 மணப்பாறை அருகே குதிரை எடுப்பு திருவிழா.
வேண்டுதல் நிறைவேற்ற சுடுமண் சிலைகளை தலையில் சுமந்து ஆண்கள் முன் செல்ல மண்ணாலான பொங்கல் பானைகளை சுமந்து பின்னே சென்ற பெண்கள்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தெற்கு பொய்கைப்பட்டியில் விநாயகர், நாயன்மார் கன்னிமார், பெரியக்காண்டியம்மன், மகாமுனி, சந்தன கருப்பசாமி, பொன்னர் – சங்கர், தங்காள், பேச்சிமொரங்கன், வீரபாகு ஆகிய தெய்வங்கள் அடங்கிய கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறும். இதே போல் இந்த ஆண்டும் திருவிழா கடந்த 2 ம்தேதி சந்தனகருப்பசாமிக்கு அபிஷேக ஆராதனையுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. தினசரி மண்டகப்படி நிகழ்ச்சியும் சுவாமி புறப்பாடும் நடைபெற்று வந்த நிலையில் இன்று இரவு குதிரை எடுப்பு விழா நடைபெற்றது.
இந்த திருவிழாவில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேறிய பின் நேர்த்திக்கடனை செலுத்திடும் வகையில் சுடுமண்ணால் செய்யப்பட்ட தெய்வங்கள், குதிரை, பசு, காளை உள்ளிட்ட பல்வேறு வடிவத்திலான நூற்றுக்கணக்கான சிலைகள் கஸ்பா பொய்கைப்பட்டியில் உள்ள பெரியக்காண்டியம்மன் கோவிலில் வைக்கப்பட்டு சிலைகளாக்கு கண் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டது. பின்னர் தாரை, தப்பட்டை முழங்க ஆண்கள் சிலைகளை தலையில் சுமந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாயன்மார் கன்னிமார் கோவிலுக்கு ஊர்வலமாகச் சென்றனர். சிலைகளுக்கு பின்னே திரளான பெண்கள் பொங்கல் வைக்க மண் பானைகளை தலையில் சுமந்து சென்றனர். சிலைகள் அனைத்தும் நாயன்மார் கன்னிமார் கோவிலில் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
இதன் பின்னர் பெண்கள் தாங்கள் சுமந்துவந்த மண்பானையால் பொங்கல் வைத்தனர். இந்த விழாவில் பொய்கைப்பட்டி, ரெங்ககவுண்டம்பட்டி, ஆவகக்காரபட்டி, நம்பம்பட்டி, நல்லியம்பட்டி, அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.