நில மோசடி புகார்: தொழிலதிபர் வீட்டில் சோதனை செய்ய போலீசார் விடிய விடிய காத்திருப்பு
திருச்சி, அக். 14 நில மோசடி புகார்: தொழிலதிபர் வீட்டில் சோதனை செய்ய போலீசார் விடிய விடிய காத்திருப்பு
திருச்சி எஸ்பி வருண்குமாருக்கு பொதுமக்களிடமிருந்து போலி ஆவணம் தயாரித்து நிலங்களை அபகரித்து உள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து நில மோசடி தொடர்பாக திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை லட்சுமிபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த மோகன்பட்டேல் என்பவரது வீட்டில் திருச்சி மாநகரம் மற்றும் புறநகர போலீசார் இணைந்து நேற்று சோதனை மேற்கொள்ள வந்த போது வீட்டில் இரு பெண்கள் மட்டும் இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் வீட்டில் உள்ளவர்கள் போலீசாரை வீட்டின் உள்ளே அனுமதிக்காமல் கதவை உள்தாழிட்டனர். சோதனை நடத்துவதற்கான சர்ச் வாரண்ட் இல்லாததால் போலீசார் விசாரணை மேற்கொள்ள முடியாமல் போனது. மேலும் இரவு நேரம் என்பதால் போலீசார் உள்ளே செல்லாமல் மீண்டும் காலையில் சோதனை மேற்கொள்ள திட்டமிட்டனர். இதனை தொடர்ந்து வீட்டில் உள்ளவர்களை வெளியே விடாமல் விடிய விடிய 30-க்கும் மேற்பட்ட போலீசார் வீட்டை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து தனது தந்தை வீட்டிற்கு வந்த மோகன் பட்டேலின் மகள் பூர்ணிமா பட்டேல் என்பவர் இரவு முழுக்க வீட்டில் வெளியே விடாமல் வைத்திருந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆனதாகவும் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாமல் தவித்ததாகவும் போலீசார் கடுமையான கட்டுப்பாடு விதித்து கொடுமை செய்ததாகவும் பூர்ணிமா பட்டேல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
உரிய ஆவணங்கள் இன்றி உள்ளே போலீசார் அத்துமீறி நுழைய முயற்சித்து வருகின்றனர். எனது தந்தை மோகன் பட்டேல் வெளியூர் சென்று இருப்பதால் அவர் வந்தவுடன் சோதனையை மேற்கொள்ளுமாறு போலீசாரிடம் அறிவுறுத்திய போது போலீசார் அதனை பொருட்படுத்தாமல் எங்களை வீட்டு காவல் சிறை வைத்தது போல விடிய விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே பூர்ணிமா பட்டேலின் வழக்கறிஞர் சம்பவ இடத்திற்கு வந்து பூர்ணிமா பட்டேல் மற்றும் அவரது குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உரிய அனுமதி பெற்று கடுமையான சோதனைக்கு அழைத்துச் சென்றனர்.