தா.பேட்டை மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
திருச்சி, ஆக.30 திருச்சி மாவட்டம், தா.பேட்டையில் பிள்ளாதுறை நெசவாளர் காலனியில் அமைந்துள்ள மலைக்கோட்டை மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
தா.பேட்டையில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள நெசவாளர் காலனியில் மகா மாரியம்மன் கோயில் கட்டப்பட்டு வந்தது. இதன் திருப்பணி வேலைகள் முடிவுற்ற நிலையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் புனித நீர் எடுத்து வருதல், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்ணம், நாடி சந்தானம், யாகவேள்வி, வேத பாராயணம், பூர்ணாகுதி, கடம் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்வுகளை தொடர்ந்து கோயில் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து கருவறையில் அமர்ந்துள்ள மலைக்கோட்டை மகா மாரியம்மன், உற்சவமூர்த்தி பரிவார தெய்வங்கள் விநாயகர், முருகன், கருப்பண்ண சுவாமி, மதுரை வீரன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு புனித நீர் பெற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவில் பேரூராட்சி தலைவர் ராஜலட்சுமி, திமுக செயற்குழு உறுப்பினர் ஆப்பிள் கணேசன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அம்மன் பக்தர் மகேஷ் தலைமையிலான விழா குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் தா.பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சீவி தலைமையிலான போலீசார் ஈடுபட்டனர்.