கள்ளிக்குடி மார்க்கெட்டை முறையாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வியாபாரிகள் மனு

0 513
Stalin trichy visit

மணிகண்டம் கள்ளிக்குடி புதிய மார்க்கெட்டில் கடை எடுத்தவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் எனவும், ஒரு லட்சத்திற்கும் மேலாக வாடகை கட்டி வருவதாகவும், தகுந்த தீர்வு வேண்டும் என வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் நிலவும் இட நெருக்கடி, போக்குவரத்து நெரிசல் மற்றும் காய்கறி கழிவுகளால் விளையும் சுகாதாரச் சீர்கேடு ஆகிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், மணிகண்டம் அருகே கள்ளிக்குடியில் ரூ.77 கோடியில் 10 ஏக்கரில் நவீன வசதிகளுடன் 19 வரிசை கட்டிடங்களில் 1,000 கடைகள் அடங்கிய காய்கறி, பழங்கள், மலர்களுக்கான மத்திய வணிக வளாகம் கட்டப்பட்டு, 2017, செப்.5-ம் தேதி அப்போதைய முதல்வர் பழனிசாமியால் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைக்கப்பட்டது.

இதனிடையே, 2018, ஜூன் 30-ம் தேதி முன்னாள் அமைச்சர்கள் என்.நடராஜன், எஸ்.வளர்மதி ஆகியோர் கள்ளிக்குடியில் சில வணிகர்களைக் கொண்டு முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தனர். ஆனால், எதிர்பார்த்த வியாபாரம் ஆகாததால் சில மாதங்களிலேயே அவர்களும் காந்தி மார்க்கெட் பகுதிக்கே மீண்டும் திரும்பிவிட்டனர்.

தொடர்ந்து, வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று தரைத்தளத்தில் மட்டும் இரு கடைகளுக்கு நடுவில் இருந்த சுவர் அகற்றப்பட்டு ஒரு கடையாக மாற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தரைத் தளத்தில் இருந்த 500 கடைகள் 330 ஆகக் குறைக்கப்பட்டன. ஆனால், அதன்பிறகும் கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்துக்கு காந்தி மார்க்கெட் வியாபாரிகள் செல்லவில்லை. இதனால், 830 கடைகளும் காலியாகவே இருந்து வந்தன.இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 207 கடைகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டன. எஞ்சிய 623 கடைகளை வியாபாரிகளுக்கு ஒதுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில் தற்போது கள்ளிக்குடி மார்க்கெட்டை முறையாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்த பத்திரம் கொடுக்க வேண்டும் என்றும், நடப்பாண்டு உரிய ஒப்பந்த பத்திரம் புதுப்பித்து தரவேண்டும் என்றும், மார்க்கெட் செயல்பாட்டிற்கு வரும் வரை பராமரிப்பு செலவுக்காக தொகையாக ரூ.250 மட்டும் குறைந்த பட்ச வாடகையாக நிர்ணயிக்கப்பட வேண்டும். துண்டிக்கப்பட்ட மார்க்கெட் இணைப்பு உடனடியாக வழங்க வேண்டும். பழுதடைந்த மின் கோபுரம் மற்றும் பொது மின் விளக்குகள் சரி செய்து தரவேண்டும். கழிவறை மற்றும் மார்க்கெட் பொது இடங்களை சரியாக பராமரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

கண்காணிப்பாளரின் அத்துமீறல் காரணமாக பல கடைகளை உள் வாடகைக்கு விடப்படும் செயல்பாடு உள்ளது. துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்ட ஆட்சியரிடம் சுமார் 70க்கும் மேற்பட்ட கடை எடுத்த வியாபாரிகள் மனு அளித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.