பெருவளப்பூரில் நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள்…
பெருவளப்பூரில் வீட்டின் பின்பக்கம் வழியாக உள்ளே புகுந்த மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடிச் சென்றனர்.
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே பெருவளப்பூரில் வீட்டின் பின்பக்கம் வழியாக உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டின் பீரோவில் இருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ. 3000 பணத்தை திருடிச் சென்றனர்.
பெருவளப்பூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் 63 வயதான சிவசாமி. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பக்க கதவை பூட்டிவிட்டு திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்தார். இவருடைய மனைவி வீட்டின் பின்பக்க கதவை சாத்திவிட்டு பூட்டாமல் வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நள்ளிரவில் வீட்டின் பின்பக்கம் வழியாக உள்ளே சென்ற அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டின் பீரோவில் இருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ. 3000 பணத்தை திருடிச் சென்றனர். காலையில் சிவசாமி எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்துள்ளது.அப்போது பீரோவை சோதனை செய்தபோது பீரோவில் இருந்து 6 பவுன் நகை மற்றும் ரூ.3000 பணம் திருடு போனது தெரியவந்தது.
இது குறித்து காணிக்கிளியநல்லூர் காவல் நிலையத்தில் சிவசாமி புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் விசாரணை செய்த காணிக்கிளியநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.