திருச்சியில் புதிய டைடல் பூங்கா : காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்
திருச்சி, பிப்.18 தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி சூழல் அமைப்பை பரவலாக்கும் முயற்சியின் அடுத்தகட்டமாக, திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பஞ்சப்பூரில், ரூ.403 கோடி மதிப்பீட்டில் 5.58 லட்சம் சதுரஅடி பரப்பளவில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் IT, ITES, BPOs, Startups போன்ற நிறுவனங்கள் இடம் பெறும் வகையில் புதிய டைடல் பூங்கா அமைப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து இன்று அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை செயலாளர் வி. அருண் ராய், டிட்கோ மற்றும் டைடல் பார்க் மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பஞ்சப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி, மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, சவுந்தரப்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.