பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கல்
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம், திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் இணைந்து நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியினை நடத்தியது.
நூலகர் புகழேந்தி வரவேற்றார். புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் தலைமை வகித்து பேசுகையில், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களையும் காய்ச்சல் ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கிறது. மற்ற காய்ச்சல்களுக்கும், சளி போன்ற நோய்களுக்கும் சித்த மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலவேம்பு கசாயம், காய்ச்சலுக்கும் மருந்தாக வழங்கப்படுகிறது.
காய்ச்சல் ஏற்படும்போது ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை வேகமாக குறைகிறது.
நிலவேம்பு கசாயம் அருந்தும்போது, அது ரத்தத்தில் தட்டணுக்கள் குறைவதை தடுத்து நிறுத்துவதோடு, தட்டணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் உதவுகிறது என்று சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மேலும், டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் தடுப்பதில் நிலவேம்பு கசாயம் முக்கிய பங்கு வகிப்பதால், தமிழக அரசும், பல தொண்டு நிறுவனங்களும், அரசியல் கட்சியினரும் ஆங்காங்கே நிலவேம்பு கசாயத்தை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்கள்.
நிலவேம்பு என்பது வீடுகளில், காட்டுப்பகுதிகளில் வெள்ளைநிற பூ பூக்கும் ஒருவகை செடியாகும். இதை கிராமத்தில் உள்ள மக்கள் சிறியாநங்கை செடி என்று கூறுவார்கள்.இந்த செடியானது அதிக கசப்பு தன்மை கொண்டது. இந்த மூலிகை மூலம் பலவிதமான நோய்களை தீர்க்க முடியும்.தீராத காய்ச்சல், டெங்கு காய்ச்சல், மலேரியா காய்ச்சல், சிக்குன் குனியா காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், தோல் நோய், தலையில் நீர்க்கோர்வை, பித்தமயக்கம், மூட்டு, உடல் வலி மற்றும் பால்வினை நோய் உள்ளிட்ட பெரும்பாலான நோய்களை தீர்க்க முடியும். டெங்கு காய்ச்சலுக்கு பயன்படுத்துகிற நிலவேம்பு கசாயத்தில் நிலவேம்பு மட்டும் பயன்படுத்தப்படுவது இல்லை. நிலவேம்புடன் மேலும் 8 பொருட்களும் சேர்த்துத்தான் நிலவேம்பு கசாயம் தயாரிக்கப்படுகிறது.
அதாவது நிலவேம்பு என்கிற சிறியாநங்கை செடி, வெட்டிவேர், விளாமிச்சை வேர், பற்படாகம், பேய் புடல், கோரைகிழங்கு, சந்தனதூள், சுக்கு, மிளகு ஆகிய 9 பொருட்களையும் சம அளவு எடுத்து அரைத்து பொடியாக்க வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் பொடிக்கு 200 மில்லி தண்ணீர் வைத்து கொதிக்க விட வேண்டும். இந்த 200 மில்லி தண்ணீர் 50 மில்லி தண்ணீராக வற்றியவுடன் அதனை வடிகட்டி மிதமான சூட்டில் குடிக்க வேண்டும்.இந்த கசாயத்தை தயார் செய்த 4 மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும்.நிலவேம்பு கசாயம் என்பது 9 மூலிகைகளின் கூட்டுப்பொருள். இந்த கசாயத்தை குடித்தால், நோய் எதிர்ப்பு சக்திதான் அதிகரிக்குமே தவிர நோய்கள் வராது. மலட்டுத்தன்மை ஏற்படாது.மலட்டு தன்மைக்கும் இந்த கசாயத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
நிலவேம்பு கசாயத்தில் சந்தனம் சேர்ப்பது உடலுக்கு தேவையான குளிர்ச்சியை கொடுக்கும். மிளகு விஷத்தன்மையை முறிக்கும். இதைபோன்று ஒவ்வொரு மூலிகையும், ஒவ்வொரு விதமான நன்மையை உடலுக்கு தரும். நிலவேம்பு கசாயம் குடிப்பதால் ரத்தத்தின் தட்டணுக்கள் அதிகரிக்கும். எனவே மக்கள் யாரும் பயப்படாமல் நிலவேம்பு கசாயம் குடிக்கலாம் என்றார்.
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கத்தினர் பாண்டியன் முகமது சுபேர், தாமோதரன், சந்திரசேகரன், குணசேகரன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.